பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தலுக்குரிய நாளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டிருந்த கொதிநிலை இன்னும் தணியவில்லை.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்குரிய வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் திகதி முதல் 11 ஆம் திகதி நண்பகல்வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் விசேட அரசிதழ் ஊடாக ஜனாதிபதி அறியப்படுத்தியுள்ளார்.

அத்துடன், 10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாள், வேட்பு மனு ஏற்கும் திகதி உள்ளிட்ட விடயங்களை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கவேண்டும். எனினும், நாடாளுமன்ற தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம் உள்ளது. அதற்கமையவே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுரவுக்கு கடிவாளம்போட எதிரணிகள் சங்கமம்?

இலங்கையில் தேசிய ரீதியில் வெறும் 3 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே தன்னகத்தே கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் முன்னோடியான ஜே.வி.பி., ஜனாதிபதி தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் திஸ்ஸமஹாராம பிரதேச சபையை மட்டுமே தனித்து ஆட்சிசெய்து அனுபவமுள்ள ஜே.வி.பிக்கு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலானது அக்கட்சியின் கடந்துவந்த பாதையில் முக்கிய திருப்புமுனையாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பதிவுசெய்யப்பட்டிருந்த மொத்த வாக்காளர்களில் 35 லட்சத்து 20 ஆயிரத்து 438 பேர் வாக்களிக்கவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள், சிறைக்கைதிகள், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நோயாளிகள், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்ற மீனவர்கள், உயிரிழந்தவர்கள் என பலருக்கு இதில் உள்ளடங்குகின்றனர்.

அதேபோல ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்கு வீதத்தையும், ரணில் விக்கிரமசிங்க பெற்ற வாக்கு வீதத்தையும் கூட்டினால் அது 50 வீதத்தை தாண்டுகின்றது. அதாவது ஜனாதிபதி தேர்தலின்போது சஜித்தும், ரணிலும் இணைந்திருந்தால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுத்திருக்கலாம் என்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறையே முதல் சுற்றில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறவில்லை. 2ஆவது விருப்பு வாக்கு கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

அந்தஅடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் அவ்வளவு இலகுவில் சாதாரணப் பெரும்பான்மை பலத்தை (113 ஆசனங்கள்) பெற்றுவிட முடியாது என்பதும் சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் இணைந்து செயற்பட்டால் நாடாளுமன்றம் ஊடாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் எனவும் கருதுகின்றனர். இதற்கமையவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை இணைப்பதற்குரிய பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சின்னமா, எண்ணமா?

இணைவு காலத்தின் கட்டாயம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுள்ளனர். கூட்டணி சாத்தியப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளராக கபீர் ஹாசீமை சஜித் நியமித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

எனினும்,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும், தொலைபேசி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் போன்ற சஜித் தரப்பில் நிபந்தனைகள்தான் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, தேசியப் பட்டியல் ஊடாகவும் சபைக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து, சஜித் பிரதமராவதை ஏற்கின்றார் என்ற மறைமுக சமிக்ஞையை ரணில் வெளியிட்டுள்ளார். நிலைமை இப்படி இருக்கையில் ஐதேக தலைமைப்பதவியில் மாற்றம் கோரும் சஜித் தரப்பின் அழுத்தம் நியாயமானதா?

இரு தரப்பினரும் கூட்டு அமைத்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதைக்காட்டிலும் யானை சின்னத்தில் வருவது கூடுதல் பலன் என்பதே உண்மை. எனினும், இரு தரப்பினரதும் அரசியல் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் பொது சின்னமே சிறந்த தேர்வாக அமையும். அதற்குரிய நகர்வுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வெற்றி யாருக்கு?

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் தரப்புகள் நாடாளுமன்றத் தேர்தலிலும் இலகுவாக வெற்றிபெற்றுள்ளதே இலங்கையின் கடந்தகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் இம்முறை நிலைமை மாறும் என்பதற்குரிய சாத்தியமும் இல்லாமல் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினர் சாதாரணப் பெரும்பான்மையை பெற்றாலும்கூட அவர்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாமல்போகும். அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்பார்த்த எல்லாவித மாற்றங்களையும் தேசிய மக்கள் சக்தியினரால் இலகுவில் செய்துமுடிக்க முடியாமல்போகும் என்பதே கசப்பான உண்மையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்துவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர், மீண்டும் மொட்டு கட்சி திருப்பும் சாத்தியம் உள்ளது. அதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த பொதுத்தேர்தலைபோன்றே ஈபிடிபி, தமிழ்; மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் என்பன வடக்கு, கிழக்கில் சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கக்கூடும். முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பன கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தனிவழி செல்லக்கூடும்.

யாழ்.மாவட்டத்தில் இம்முறை ஒரு ஆசனம் குறைந்துள்ளது. அதாவது அங்கிருந்து அறுவர் மாத்திரமே தெரிவுசெய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. தமிழ் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் அதன்மூலம் தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகநிலை சென்றடையக்கூடும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி யாழ்.மாவட்டத்திலும் பலமானதொரு அணியையே களமிறக்கவுள்ளது.