அடுத்து என்ன?

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தேசிய ரீதியில் மட்டும் அல்ல சர்வதேச ரீதியிலும் பேசப்படுகின்றது. அது தொடர்பில் பார்வையை செலுத்த முன்னர் அநுரவை பற்றி சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

யார் இந்த அநுர?

1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்க, தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம காமினி வித்தியாலயத்திலும், உயர் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரிலும் பயின்றார்.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் அவர்.

1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான அநுர, 1995 இல் பட்டதாரியானார்.
1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார்.

1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார். 2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு  அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.

2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைமைப்பொறுப்பு கையளிக்கப்பட்டது. அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.
2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சபையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் பதவி வகித்தார்.
2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். மூன்றாவது இடம்பிடித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையில் ஜனாதிபதியாகியுள்ளார்.

வெற்றி எப்படி சாத்தியமானது?

1947ஆம் ஆண்டு முதல் இலங்கையை மாறி, மாறி இரு முகாம்களே ஆட்சி செய்தன. குறிப்பாக சேனாநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், விக்கிரமசிங்க குடும்பம், ராஜபக்ச குடும்பம் என பிரபுக்கள் தரப்பே அதிகாரத்தில் உயர் பதவிகளை அலங்கரித்துள்ளனர்.  

இலங்கை சுதந்திரம் அடையும்போது அதன் பொருளாதார பலம் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இருந்துள்ளது. சிங்கப்பூரை இலங்கைபோல் கட்டியெழுப்புவேன் என்றுகூட சிங்கப்பூரின் தலைவர்கள் அன்று கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல நாட்டில் அனைத்து வளங்களும் உள்ளன. நாட்டைவிட 8 மடங்கு கடல் பரப்பு உள்ளது.

ஆனால் கடைசியில் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்தது. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. அரிசியைக்கூட இறக்குமதி செய்யும் நிலை உருவானது. இதனால் பிரதான இரு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
அதேபோல கட்சி தாவல் கலாசாரம், அரசியல்வாதியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோ நிலை உள்ளிட்ட காரணங்களும் இலங்கையில் முறைமை மாற்றத்துக்கான அவசியத்துவத்தை மக்கள் மத்தியில் விதைத்தது. 2015 காலப்பகுதியில் விதைக்கப்பட்ட அந்த விதை இன்று பெரும் விருட்சமாகி, புதியதொரு கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்ல ஜே.வி.பியின் கடந்தகாலம் பற்றி சர்ச்சைகள் இருந்தாலும் அக்கட்சியின் ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் என்பன மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. கட்சி கட்டுக்கோப்பு, கூட்டு தலைமைத்துவ பண்பு, ஆடம்பரமற்ற வாழ்க்கை, கட்சி ஒருங்கமைப்பு என பல விடயங்களைக் குறிப்பிடலாம். ஊழல்களுக்கு முடிவுகட்டி நல்லாட்சியை ஏற்படுத்தக்கூடிய தரப்பு தேசிய மக்கள் சக்தியினர்தான் என்பதே மக்களின் கடைசி நம்பிக்கை. இதுவரை ஜே.வி.பி. நாட்டை ஆளவும் இல்லை. எனவே, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிபார்ப்போம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இவையெல்லாம் ஒருங்கிணைந்தே ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது.

அடுத்து என்ன?

தேர்தலில் வென்றுவிட்டால் போதுமா? தேர்தல் வெற்றியைவிட தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதென்பது அநுர தலைமையிலான அரசாங்கத்துக்கும் அக்கினிப்பரீட்சையாகவே அமைந்துள்ளது. தேசிய உற்பத்திமீது அதிக நம்பிக்கை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி, நவீன யுகத்துக்கேற்ப தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளது என்பதை அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவிலேயே அநுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார். எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதுவரையில் இடைக்கால அரசாங்கம் செயற்படும். அந்த இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய செயற்படுவார். நான்கு பேர்கொண்ட அமைச்சரவையே இருக்கும். அவர்களுக்கிடையில் முக்கிய அமைச்சுகளி பகிரப்படும். அமைச்சுகளின் செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளது.

புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதுமட்டுமல்ல அரசியல் ரீதியில் நியமனம் பெற்ற வெளிநாட்டு தூதுவர்களும் மாற்றியமைக்கப்படவுள்ளனர். அரசாங்க திணைக்களங்களில் அரசியல் நியமனத்தால் உயர் பதவிக்கு வந்தவர்களின் பதவிகளும் பறிக்கப்படும் அல்லது அவர்களாகவே பதவி விலகக்கூடும். முதலில் பதவி விலகுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.  

வெளிநாட்டு கொள்கை என்ன?

ஜே.வி.பியினர் சீனா, கியூபா, வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகளுடன்தான் வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்றுவர் என்ற பிரச்சாரம் தேர்தல் காலங்களில் மாற்று கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அணிசேராக் கொள்கையே தொடரவுள்ளது. அதுவும் அயல்நாடான இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. இலங்கையின் தரை, வான் மற்றும் கடற்பரப்புகளை இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு எதிராக எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேபோல மேற்குலக நாடுகளுடனும் நட்புறவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அரச நிர்வாகத்தில் உடனடி மாற்றங்கள் செய்யப்பட்டாலும் வெளிவிவகாரக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் உடனடியாக நிகழ்வதற்குரிய சாத்தியம் இல்லை.

புதிய அரசமைப்பு

பொதுத்தேர்தலுக்கு பிறகே புதிய அரசமைப்பை ஒன்றரை வருடகாலப்பகுதிக்குள் நிறைவுசெய்வதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசமைப்பை, மாற்றங்கள் சகிதம் நிறைவேற்ற உள்ளது. அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது இலங்கையில் 4 தசாப்தங்களுக்கு பிறகு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழர் விவகாரம் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் என அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.