மலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

மலையக மக்களின் பல வருடகால கோரிக்கையாக இருந்து வருகின்ற “காணி உரிமை” என்ற விடயம் உரிய வகையில் – முறையாக நிறைவேற்றப்படும் என்பதற்குரிய உத்தரவாதம் இம்முறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவ்வுறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ஆங்காங்கே காணி உரித்துகள் வழங்கப்பட்டிருந்தாலும், அது ஒரு அத்தாட்சி பத்திரமாகவே இருந்துள்ளது. எனவே, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் காணி உரித்தை வங்கியில் வைத்து கடன் வாங்குதல் உட்பட தனியார் காணிக்குரிய அத்தனை அம்சங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் 200 வருடகால காத்திருப்புக்கு அது ஆறுதல் பரிசாகவேனும் அமையும்.

மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வழங்க வேண்டும் என பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்ககூடிய விடயமாகும்.

மறு புறத்தில் மலையகம் எழுந்துவருகின்றது. மக்களை ஏமாற்றிய காலமும் மலையேறிவிட்டது. இம்முறை அவர்களை ஏமாற்ற முற்பட்டால் மலையகத்தை மையமாகக் கொண்டியங்கும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆயுள் நீடிக்காது என்பது உறுதி. ஏனெனில் மலையக இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியக் கட்கிகளின் ஏமாற்று அரசியலால் தற்போது அநுர பக்கம் அணிதிரண்டுள்ளனர்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே, மலையகத்துக்கு முக்கியத்துவம் வழங்கி பல முன்மொழிவுகளை செய்துள்ளார்.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள
உறுதிமொழிகள் வருமாறு,

இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்கள் அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில் கொண்டு, அச் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்த நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளைக் கொண்ட தேசிய பாடசாலைகளை நிறுவுவது உட்பட இலக்கு நோக்கிய திட்டங்கள் மூலம் அனைத்து நிலைகளிலும் மலையக மாணவர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இலங்கை மலைநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற உத்தேச பெயரில் முழுமையான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முதல் படியாக தற்போதுள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹட்டன் பகுதியில் வளாகமொன்று ஆரம்பிக்கப்படும்.

மலையக இளைஞர்களுக்கான இலக்கு நோக்கிய மற்றும் அணுகக்கூடிய தொழிற்பயிற்சி திட்டங்கள் உருவாக்கப்படும்.

தோட்டத்துறையின் அனைத்து சுகாதார வசதிகளையும் தேசிய சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரச கொள்கையை அறிமுகப்படுத்தி அதனை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த இடம்பெயர் காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு முறையான சம்பளம் உறுதிப்படுத்தப்படும்.

பயிர்ச்செய்கை நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு மற்றும் தொழில்முனைவர் நடவடிக்கைகளுக்காகத் தோட்டங்களுக்குள் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டங்களைச் சார்ந்த குடியிருப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

தோட்டங்களைச் சார்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான உறுதிகளுடனான காணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர். பெருந்தோட்டத்துறை கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பிலும் இருவரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

திலகராஜாவின் வெல்வதற்காக அல்ல
சொல்வதற்காக எனும் வியூகம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மலையகத் தமிழரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினரான இருந்த காலப்பகுதியில் திலகராஜா மலையக மக்களுக்காக முக்கிய பல சேவைகளை செய்துள்ளார். குறிப்பாக நாடாளுமன்றத்தில் உரிமைசார் விடயங்களை வலியுறுத்தி அதற்குரிய சட்டரீதியிலான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர். பிரதேச சபை சட்டதிருத்தம் இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகள்மூலம் மலையக பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு காத்திரமாக செயற்பட்டவர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர் மலையக அரசியல் அரங்கம் எனும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பி அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயற்படும் மல்லியப்புசந்தி திலகர் எனப்படும் திலகராஜா, முதலாவது மலையகத் தமிழனாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது தெரியும். அதனால்தான் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காக எனும் தொனிப்பொருளை தெரிவுசெய்து, பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

மும்மொழி ஊடகங்களிலும் அவர் மலையக மக்களின் அவல நிலைகளை தற்போது எடுத்துரைத்துவருகின்றார். லயன் அறையில் தேர்தல் அலுவலகமொன்றை திறப்பதற்குகூட உரிமை இல்லை என்ற விடயத்தை வெளிச்சம்போட்டுக்காட்டி, லயத்தில் வாழ்பவர்களின் உரிமையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி பல விடயங்களை ‘ஜனாதிபதி வேட்பாளர்’ என்ற அந்தஸ்த்தை பயன்படுத்தி அவர் வெளிப்படுத்திவருவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.