பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாகவும்,சுயாதீனமாகவும் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை இதுவரை முன்வைத்துள்ளனர்.

இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும் உள்ளடக்கம் பற்றி தமது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.

4 பிரதான வேட்பாளர்களில் மூவரின் தேர்தல் விஞ்ஞானங்கள் வெளிவந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் செப்டம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

பொருளாதார மீட்சி, வருமான வழிமுறைகள், வரிக்கொள்கை, கல்வி, சுகாதாரம் , விவசாயம், தொழில்நுட்பம் என அத்தனை துறைகளையும் உள்ளடக்கிய வகையில் மேற்படி மூன்று தரப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தமது ஆட்சியில் எவ்வாறான தீர்வு முன்வைக்கப்படும், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறை என்ன என்பது உட்பட வடக்கு, கிழக்கு தமிழர் விவகாரம் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் உறுதிமொழிகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றி ஆராய்வோம்.

அநுரகுமார திஸாநாயக்க

“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தலைப்பின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டது.  

நல்லாட்சி காலத்தில் புதிய அரசமைப்பை இயற்றுவதற்காக கடைப்பிடித்த செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

சமத்தவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு , ஒவ்வொரு உள்ளாட்சி நிறுவனத்திற்கும் , மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்காண்மையை உறுதி செய்யும் வகையில் அந்த அரசமைப்பு இடம்பெறவுள்ளது.    

“ வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற  படுகொலைகள், காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்படும்.

இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயற்பாடு விரிவாக்கப்படும்.

மதங்களுக்கிடையிலான மோதல்களை தீர்த்துவைப்பதற்கான அனைத்து மதத் தலைவர்களையும் மதம்சார்ந்த கல்விமான்களினதும் உள்ளடக்கத்துடனான சர்வ மதப் பேரவை ஸ்தாபிக்கப்படும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்து, அவர்கள் சுதந்திரமா வாழ்வதற்கு வழிவகுக்கப்படும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உள்ளிட்ட அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களும் இல்லாதொழிக்கப்பட்டு, அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகம் முறைப்படுத்தப்படும்.    

காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றினூடாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்கள் நிறுத்தப்படும்.    

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள், அரசஅலுவலகம் போன்ற சிவில் சேவைகள் நிலவும் இடங்களில் தமிழ் மொழியில் பணிகளை ஆற்றக்கூடியதாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல்.  

வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விற்பனை வசதிகளுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்குதல்.”
போன்ற உறுதிமொழிகள் அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், “ ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்” ஐந்தாண்டுகள் எனும் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.    

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 2024 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய, மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்படும் எனவும் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

“ தேசிய கொள்கை திட்டத்துக்கு அமைய, தமது மாகாணத்துக்குள்  பாடசாலைக் கல்வி, தொழில் பயிற்சி,  பட்டமளிப்பு நிறுவனம், மாகாண சுற்றுலா அபிவிருத்தி, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும்.இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

மாவட்ட அபிவிருத்தி சபை நிறுவப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற பின்னர், ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படும்.  

போர் காலத்தில் இழக்கப்பட்ட காணியென்பது உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். இதற்கு நிலையானதொரு தீர்வைக்காணும் நோக்கில் தேசிய காணி ஆணைக்குழுவொன்று நிறுவப்படும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் அமுல்படுத்தப்படும்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழிலில் ஈடுபடுவதற்கு நிதி நிவாரணம் வழங்கப்படும்.” – உள்ளிட்ட உறுதிமொழிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாச

புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை தனது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக சஜித் வழங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.  
“ இலங்கையின் தற்போதைய அரசமைப்பின்கீழ் தேவையான முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்படும்.  

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசமைப்பு இயற்றப்படும். இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவென்றால் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.  

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது.
அரசமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன், மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப ; பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.  

6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும், மேலும் அதிகபட்ச நிதி திறன ; மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஸ்தாபிக்கப்படும்.
காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  

பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும்.

அரசு ஆதரவுடன் மக்கள் தொகை மாற்றங்கள் செய ;யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.” – உள்ளிட்ட உறுதிமொழிகளும் சகலருக்கும் வெற்றி என்ற சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

சஜித்தின் பொருளாதா வேலைத்திட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ச

நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளிவராவிட்டாலும், அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாக அறிவித்துவிட்டார். மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பகிரப்படமாட்டாது எனவும், ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனக் கருதும் அவர், அரசியல் தீர்வுக்கு பெரிதாக முக்கியத்துவம் வழங்கவில்லை.

அதேபோல பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை காணும்  உறுதிப்பாடே வழங்கப்பட்டுள்ளது.  தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வு வழிமுறைகள் இல்லை.

புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு என்பதால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டால்தான் எதுவும் சாத்தியம். எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வாக்கு வேட்டைக்காகக்கூட வழங்கி இருக்கலாம். ஏனெனில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை. இலங்கை வரலாற்றில் அவ்வாறு முழுமையாக அமுல்படுத்தப்படவும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இவ்வாரம் முதல் வடக்கை மையப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.