பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, அதிகாரப்பகிர்வு, அத்துமீறிய குடியேற்றங்களுக்கு தடை மற்றும் மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட உறுதிமொழிகளும் நேற்று வெளியிடப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரங்கள் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
“ இலங்கை எனும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசியஒற்றுமையை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
2015-2019 புதிய அரசிலமைப்பொன்றினை தயாரிப்பதற்காக கடைப்பிடித்த செயற்பாங்கினை துரிதமாக நிறைவு செய்து சமத்தவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்காண்மையை உறுதி செய்கின்ற புதிய அரசமைப்பை தயாரித்தல்.
ஒரே நாட்டுக்குள் அனைத்து மக்களையும் ஆட்சியில் தொடர்புபடுத்தக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்களை உறுதிசெய்தல்.
தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்று உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை ஒரு வருடத்திற்குள் நடாத்தி மக்கள் நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குதல்.
சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழு ஒன்றினைத் ஸ்தாபித்தல்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மெசியல் படுகொலைகள், காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுதல்.
இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் காரணமாக இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் செயற்பாட்டினை விரிவாக்குதல்.
மதங்களுக்கிடையிலான மோதல்களை தீர்த்துவைப்பதற்கான அனைத்து மதத் தலைவர்களையும் மதம்சார்ந்த கல்விமான்களினதும் உள்ளடக்கத்துடனான சர்வ மதப் பேரவை ஒன்றைத் தாபித்தல்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தலும் அவர்கள் சுதந்திரமாக சமூகமயமாதலை உறுதிப்படுத்துதல்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உள்ளிட்ட அடக்குமுறைசார்ந்த அனைத்துச் சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்த மக்களினதும் சுதந்திரத்தை உறுதிசெய்தல்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்துதல்.
கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அரசியல் அழுத்தங்களின்றி சகல இனத்தவர்களுக்கும் நியாயமானவகையில் கிடைக்கக் கூடியதாக தகைமைகளின் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்தல்.
மானிய உதவிகள் மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் யுத்த-விதவைகள், அனாதைகள் மற்றும் மனஅழுத்தங்களுக்கு ஆளானவர்களுக்கான மானிய உதவிகளை பெற்றுக்கொடுத்தல்.
காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றினூடாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல்.
இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்.
அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல்.
அனைத்துப் பிரஜைகளும் தமது மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தேசிய மொழிக் கொள்கையொன்றை அமுலாக்குதல்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள், அரசஅலுவலகம் போன்ற சிவில் சேவைகள் நிலவும் இடங்களில் தமிழ் மொழியில் பணிகளை ஆற்றக்கூடியதாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விற்பனை வசதிகளுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்குதல்.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தலைப்பின்கீழ் அமைந்துள்ள குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசமைப்பு குறித்து வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி வருமாறு,
“ புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடு, அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் கருத்துக் கணிப்பில் அங்கீகரித்துக் கொள்ளப்படும்.
சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சாசனத்திற்கு அமைவான உரிமைகள் அடிப்படை உரிமைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவுக்கு கொண்டுவருதல்.
சிறுவர், பெண்கள் மற்றும் வலது குறைந்த சமுதாயத்தினரின் உரிமைகள் பற்றி அரசியலமைப்பு சட்டம் சர்வதேச சமவாயங்களுக்கு அமைவாக விரிவாக்கப்படும்.
தொழிலுக்காக நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியிலும் புலம்பெயர்ந்துள்ள ஆட்களின் வாக்களிக்கின்ற உரிமை உறுதி செய்யப்படும்.
தேசியத்துவங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும் மத ரீதியான குரோதத்தையும் ஏற்படுத்தாத ஆண் – பெண் பால்நிலை அல்லது வேறு விடயங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமை ஆகிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாக மொழிச்சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பினை ஒழித்துக் கட்டி நாடாளுமன்ற ஆளுகை நிலைநாட்டப்படும். நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவார்.
புதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மட்டுப்படுத்தப்படும்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் வாழ்க்கைத்துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதியம், விசேட கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.
விஞ்ஞான ரீதியாக ஒதுக்கப்பட்ட 25 அமைச்சுக்களுக்கு 25 அமைச்சர்களையும் 25 நேரொத்த பிரதியமைச்சர்களையும் நியமிக்கும் நடவடிக்கை இடம்பெறும். இராஜங்க அமைச்சர் பதவிகள் இல்லாதொழிக்கப்படும்.
ஒவ்வொரு அமைச்சுக்கும் விடையத்துறை பற்றிய சிறப்பறிஞர்களைக் கொண்ட மதியுரை சபை நிறுவப்படும்.
தமது பொறுப்புக்களை ஈடேற்றாவிட்டால் அத்துடன் ஊழலில் ஈடுபடுவாராயின் அவர்களை திருப்பியழைப்பதற்கான அதிகாரம் வாக்காளர்களுக்கு கிடைக்கின்ற ஏற்பாடுகள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதியேக பணியாட்தொகுதிக்காக குடும்ப உறவினர்களை சேர்த்துக்கொள்ளாமை போன்ற விதிமுறைகளை உள்ளடக்கிய ஒழுக்கநெறிக்கோவையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தொடரில் பற்கேற்பதற்காக செலுத்துகின்ற கட்டணம் இல்லாது செய்யப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்களுக்கு பின்னர் செலுத்தப்படுகின்ற ஓய்வூதியம் இல்லாது செய்யப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுங்கதீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திர திட்டம் நீக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலத்தில் ஒரு வாகனத்தை மாத்திரம் வழங்குதல்.