சாக்கடை அரசியலின் வெளிப்பாடு!

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணி என அதன் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் போற்றி புகழப்பட்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தற்போதைய நிலைமை சந்தி சிரிக்கும் கட்டத்திலேயே உள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாக்கடை அரசியல் நடத்துவதாகவும், தாங்களே தரமான மாற்று சக்திகள் எனவும் மார்தட்டிக்கொண்ட முற்போக்கு கூட்டணியினர், தாங்களும் அரசியல் சாக்கடைகள்தான் என்பதை செயல்மூலம் உறுதிப்படுத்திவிட்டனர் என்று மலையக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘பார் குமார்’ , ‘குடு திகா’ மோதல் இதற்கு சிறந்த சான்றாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்தே தமிழ் முற்போக்கு கூட்டணியை உருவாக்கின. இதற்கு மலையக சிவில் அமைப்புகளும் பங்களிப்பு வழங்கின.

2015 பொதுத்தேர்தலில் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. நுவரெலியாவில் இருந்து மூன்று எம்.பிக்கள், பதுளையில் இருந்து ஒருவர், கண்டியில் இருந்து ஒருவர், கொழும்பில் இருந்து ஒருவர் என அறுவர் கூட்டணி சார்பில் தெரிவாகினர். எனினும், அவர்களால் பேரம் பேசி ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறமுடியாமல் போனது.

மலையக அதிகார சபை, பிரதேச சபை சட்டதிருத்தம் உட்பட உரிமைசார் சில விடயங்கள் வென்றெடுக்கப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முற்போக்கு கூட்டணியின் தோல்வி கண்டனர். அதுமட்டுமல்ல காணி உரிமை மற்றும் வீட்டுரிமை உள்ளிட்ட விடயங்களிலும் காத்திரமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் இன்றளவிலும் உள்ளது.

2020 பொதுத்தேர்தலில் சஜித்துடன் கூட்டணி அமைத்து முற்போக்கு கூட்டணி போட்டியிட்டது. நல்லாட்சி காலத்தில் மலையக மக்களுக்காக முன்னின்னு செயற்பட்ட, சட்டமூலங்களை கொண்டுவந்த, சபை ஒத்திவைப்புவேளை விவாதங்களை நடத்திய திலகராஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணி ஓரங்கட்டியது. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு மலையக இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்ததால் தேசிய பட்டியல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

அத்தேர்தலிலும் முற்போக்கு கூட்டணிக்கு ஆறு எம்.பிக்கள் கிடைக்கப்பெற்றது. ஆனால் சஜித் தரப்பு தேசியப்பட்டியல் வாய்ப்பை முற்போக்கு கூட்டணிக்கு வழங்கவில்லை. அதற்கான விஞ்ஞான விளக்கம்கூட தற்போது வழங்கப்பட்டுவருகின்றது. எனினும், மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் நோக்கில் திலகராஜா ,ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்றார்.

தேர்தலின் பின்னர் பதுளை மாவட்டத்தில் இருந்து தெரிவான அரவிந்தகுமார், ஆளுங்கட்சி பக்கம் தாவினார். ஹரின் பெர்ணான்டோவின் எம்.பி. பதவி பறிபோயுள்ளதால், அந்த வாய்ப்பையாவது சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்குவாரா அல்லது அதனை பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் இயலுமை முற்போக்கு கூட்டணியினருக்கு இருக்கின்றதா என்ற வினாவுக்கு விடை அறிய மலையக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவான வேலுகுமார், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டது. பார் லைசன் வாங்கிவிட்டே தாவியுள்ளார் எனவும் முற்போக்கு கூட்டணியினரால் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனை வேலுகுமார் நிராகரித்தார், தனக்கு பார் லைசன் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தினால் பதவி விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

இப்படியான பரபரப்பான சூழ்நிலையிலேயே தொலைக்காட்சி விவாதமொன்றில் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவர் பழனி திகாம்பரமும், வேலுகுமாரும் பங்கேற்றிருந்தனர். கருத்து சமர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்; கடைசியில் கைகலப்புவரை அது சென்றது. இருவரும் கட்டிப்பிடித்து சண்டைபோட்டுக்கொண்டனர்.

இச்சம்பவமே தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.‘பார் குமார்,குடு திகா’ சண்டையை வைத்து இருவரையும் நெட்டிசன்களை வறுத்தெடுத்துவருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்திலும், தவறான முன்னுதாரணத்தை வழங்கும் வகையிலும் செயற்படுவது வெட்டி தலைகுனிய வேண்டிய விடயமாகும்.

1947 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இரு தமிழ் எம்.பிக்கள் சபையில் இருந்தனர். அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டுவரை எந்தவொரு தமிழ் எம்.பியும் தெரிவாகவில்லை. 94 பொதுத்தேர்தலில் எஸ். இராஜரட்னம் சபைக்கு தெரிவானார். அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2000, 2001, 2004 மற்றும் 2010 பொதுத்தேர்தல்களின்போதும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கண்டி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

2010 பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மனோ நேரில் களமிறங்கி இருந்தாலும் அவரால் வெற்றிபெறமுடியாமல்போனது. எனினும், 2015 பொதுத்தேர்தலில் வேலுகுமார் வெற்றிபெற்றார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது. 2020 பொதுத்தேர்தலிலும் அது தக்கவைக்கப்பட்டது.

தற்போது முற்போக்கு கூட்டணியில் இருந்து வேலுகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கண்டியில் மற்றுமொருவரை கூட்டணி இறக்கக்கூடும். காங்கிசும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும். ஏனைய கட்சிகளில் இருந்தும் தமிழர்கள் வரலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் மீண்டும் இல்லாமல்போகும்.

எனவே, மலையக தமிழ்க் கட்சிகள் எல்லாம் இது விடயத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது கண்டி தமிழர்களின் அரசியல் அடையாளம் – அங்கீகாரம். அதனை தாரைவார்க்க இடமளிக்ககூடாது.