தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!

தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருக்கின்ற சிவில் அமைப்புகள் -அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக அரியதேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

அரியநேந்திரன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்கூட .

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி இதுவரையில் நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை, அந்தக்கட்சி இதுவரை காலமும் எந்தவொரு முக்கியமான விடயங்களுக்குமான தீர்மானத்தை உடனடியாக எடுப்பதில்லை. இழுத்தடித்து காலத்தைக் கடத்தியே தீர்மானங்கள் எடுத்து வந்திருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்காமலேயே, தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொதுக்கூட்டத்தை கூட்டிக்கூறியிருந்தார். கட்சி எந்தவொரு தீர்மானமும் எடுக்க முன்னரே. தனது நிலைப்பாட்டை பகிரங்கவெளியில் கூறியது மாத்திரமல்லாது. தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிப்பேன் என்ற ஒரு முடிவையும் கூறியிருந்தார்.

அதற்கு எதிராக இலங்கைத் தமிழரகக் கட்சி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கட்சியின் மத்திய குழு என்ன முடிவை எடுக்கப்போகின்றது?

இலங்கைத் தமிழர்சுக் கட்சிக்குள், தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவை தற்போதைய தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சி. சிறீதரன் ஆகியோர் பகிரங்கமாக முன்வைத்திருந்தனர். அந்த நிலைப்பாட்டை கட்சியிலுள்ள பலரும் ஆதரிக்கின்றனர். ஆனால் சுமந்திரனும் அவரை ஆதரிப்பவர்களும் மாத்திரம் தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பதுடன் அவரைத் தோற்கடிக்க வேண்டும் எனவும், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவேண்டும் எனவும் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.

சிங்கள் வேட்பாளர்களுடன் பேரம் பேசி 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில் என்ன நடந்தது என்பதை சுமந்திரன் பகிரங்கப்படுத்தவேண்டும் . சுமத்திர னும், மறைந்த இரா.சம்பந்தனும் தன்னிச்சையாக பல பேரம்பேசல்களை முன்னெடுத்து அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைத்திருந்தன.

குறிப்பாக சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரான 2010ஆம் ஆண்டு இலங்கைத் தமிழாகக் கட்சிக்குள் எந்ததிலிருந்து தீர்மானம் எடுக்கும் சக்தியாக தன்னைக்காட்டிக்கொண்டு எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் தமிழினத்தை புதைகுழிக்குள் தள்ளியது மாத்திரமல்லாமல், தமிழாகக் கட்சியையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

சுமந்திரன் சம்பந்தன் இணை 2015ஆம் ஆண்டு இதயத்தால் இணைந்த ஒப்பந்தத்தை மைத்திரியுடன் ஏற்படுத்திக்கொண்டதாகட்டும், புதிய அரசமைப்பு உருவாக்கம் என்று சொல்லி ஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியளை முடக்க எடுக்கமுயற்சியாகட்டும் அனைத்தும் பின்னடைவான நகர்வுகளாகவே அமைந்தன. அதனால்தான் போரின் பின்னர் கோலோச்சி எந்த தமிழ் அரசுக்கட்சி சிக்கிச் சின்னாபின்னமாகி இன்று பத்தோடு பதினொராவது கட்சியாகியிருக்கின்றது.