2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தகையோடு சமய வழிபாடுகளின் பின்னர் கட்சிகளின் பிரதான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படும்.
சஜித் பிரேமதாசவின் 100 கூட்டங்கள்
வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு கொழும்பிலிருந்து குருணாகலை புறப்படும் சஜித் பிரேமதாச, தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குருணாகலை மண்ணிலிருந்து ஆரம்பிக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 75 லட்சம் வாக்குகளை குறிவைத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 100 பிரதான கூட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் குழு திட்டமிட்டுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரதானக் கூட்டங்கள் இடம்பெறும்.
அத்துடன் நின்றுவிடாது 160 தேர்தல் தொகுதிகளில் மத்திய மட்டத்திலான 400 முதல் 600 வரையான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. விழிப்புணர்வுக் கூட்டங்கள், வீடுகளுக்கு சென்று தெளிவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
ஐக்கிய மக்கள் கூட்டணி உதயம்
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகஸ்ட் 08 ஆம் திகதி உதயமானதுடன், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, சுதந்திரக் கட்சியின் தயாசிறி அணி என்பன கூட்டணியில் இணைந்து, கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை உறுதிப்படுத்தின.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவும் இக்கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் சில கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கூட்டணியில் இணைந்துள்ளன.
எனினும், சஜித்துடன் கூட்டணி வைத்திருந்த ரிஷாட் பதியுதீன் கூட்டணியில் இணையவில்லை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னும் முடிவெடுக்கவில்லை.
காலை வாரிய தம்மிக்க
களமிறங்கிய நாமல்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடும் நிகழ்வை ஆகஸ்ட் 07 ஆம் திகதி நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மொட்டு கட்சி செய்திருந்தது. எனினும், ஆகஸ்ட் 6 ஆம் திகதி, தேர்தலில் களமிறங்க முடியாது என தம்மிக்க அறிவித்துவிட்டார்.
தனிப்பட்ட காரணத்தால்தான் அவர் இந்த முடிவை எடுத்தார் எனக் கூறப்பட்டாலும், மொட்டு கட்சி பிளவுபட்டுள்ளதால் வெற்றிபெறுவது கடினம் என்பதாலேயே பின்வாங்கும் முடிவை தம்மிக்க எடுத்தார்.
அதேபோல தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அவரின் தயாரும் விரும்பவில்லை. தனது மகன் தீவிர அரசியலுக்கு சென்றால் என்ன நடக்கும் என சிந்தித்தே தம்மிக்கவின் தாய்க்கு மாரடைப்புகூட ஏற்பட்டு, தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
தம்மிக்க முடியாது எனக் கூறினால் நாமலை களமிறக்கும் மாற்று தேர்வும் முன்கூட்டியே மொட்டு கட்சியிடம் இருந்துள்ளது. அதன்காரணமாகவே போட்டோ சூட், காணொளி தயாரிப்புகள் என்பனவெல்லாம் தயார் நிலையில் இருந்தது எனக் கூறப்படுகின்றது.
ஆனால் நாமலை வேட்பாளராக அறிவிக்கும் நிகழ்வுக்கு நாமலின் சகோதரர்கள் வரவில்லை, தாய் ஷிராந்தி ராஜபக்சகூட தலைகாட்டவில்லை, சமல் ராஜபக்சவும் பங்கேற்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காததால் நாமல்மீது அவர்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் பங்கேற்கவில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர், ஆனால் ராஜபக்ச குடும்பம்மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் ராஜபக்சக்கள் எல்லாம் சென்றால் அது நாமலின் பிரசாரத்தில் தாக்கம் செலுத்தும் என்பதால் அவர்கள் வரவில்லை என மற்றுமொரு தரப்பு குறிப்பிடுகின்றது.
தேர்தல்களின்போது அநுராதபுரம்சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னரே ராஜபக்சக்கள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது வழமை. இதற்குரிய ஏற்பாடுகளை அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன மேற்கொள்வார். ஆனால் தற்போது அவர் ரணில் பக்கம் நிற்பதால் நாமல் அநுராதபுரம் செல்வாரா அல்லது பிரிதொரு இடத்தில் இருந்து பிரசாரத்தை ஆரம்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொட்டு கட்சியின் கம்பஹா, கண்டி, கேகாலை, காலி உட்பட மாவட்ட தலைவர்கள் ரணில் பக்கம் நிற்பதால் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்திலும் நாமல் தரப்புக்கு தலையிடி ஏற்பட்டுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளரும்
வடகிழக்கு வாக்கு வங்கியும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தமிழ்த் தேசியக் கட்சிகளும், அமைப்புகளும் இணைந்தே தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கியுள்ளன.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் இருந்தாலும் நால்வர் மட்டுமே தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை ஆதரித்துள்ளனர்.
ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், அக்கட்சி உறுப்பினரான விநோனோதராதலிங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புளொட் சித்தார்த்தன் தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியில் பங்கேற்றுள்ளார். அந்தவகையில் தமிழ் பொதுவேட்பாளர் பக்கம் நான்கு தமிழ் எம்.பிக்கள் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
யாழ்;. தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 பேரும் , வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 81 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 686 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 432 பேரும் , திருகோணமலை மாவட்டத்தில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 925 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
தென்னிலங்கையில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வடக்கு, கிழக்கு வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக அமையும். இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ள விவகாரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்திருந்தாலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஆராய்வதற்கு அக்கட்சியின் மத்தியகுழு விரைவில் கூடவுள்ளது.