அனல் கக்க தயாராகும் அரசியல் களம்!

ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான கையோடு சூடுபிடிக்க ஆரம்பித்த இலங்கை அரசியல் களம் தற்போது கடும் கொதிநிலையில் காணப்படுகின்றது. அடுத்தவாரம் முதல் அனல் பறக்கும் வகையில் அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகஸ்ட் 08 ஆம் திகதி மலரவுள்ளது.

சஜித்தின் பங்காளிகளும், புரிந்துணர்வு ஒப்பந்தமும்

மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் அன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது தயாரிக்கப்பட்டுவந்தாலும் புரிந்துணர்வு கைச்சாத்திடப்பட்ட பின்னரே இறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை கொள்கை அளவில் எடுத்துள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக்கூட்டம் ஆகஸ்ட் 02 ஆம் திகதி கொழும்பில் கூடியது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
மலையகத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணம் தொடர்பில் சஜித்தின் இணக்கப்பாட்டை பெற்ற பின்னர் சஜித்துக்கான ஆதரவை முற்போக்கு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடமும் கூடி, சஜித்துக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்துள்ளது.. சிலவேளை முஸ்லிம் காங்கிரஸின் சில அரசியல் பிரமுகர்கள் ரணிலுக்கு ஆதரவாக செயற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் சஜித்தா, ரணிலா என்பதில் குழப்பிபோயுள்ளது. சஜித்துடன் தற்போது ரிஷாட் கூட்டு வைத்திருந்தாலும் அது தொடருமா , இல்லையா என்பது அக்கட்சியின் உயர்பீடக்கூட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

மொட்டு கட்சியின் வேட்பாளர்!

பங்காளிகளும்,கட்சி எம்.பிக்களும் ரணில் பக்கம் சென்றுள்ளதால் அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ள கட்சியெனக் கருதப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் 07 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான அரசியல் உறவை முறித்துக்கொண்டுள்ள ராஜபக்ச தரப்பு, பிரபல கோடிஷ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேராவை களமிறக்கும் முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாலும் பிரமாண்ட நிகழ்வை நடத்தி வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துவருகின்றது.

வணிகத்தில் கோலோச்சினாலும் அரசியல் களத்தில் கத்துக்குட்டியாகக் கருதப்படும் தம்மிக்க பெரேரா, மஹிந்த சிந்தனை வழியில் பயணிக்ககூடியவர் என்பதாலேயே ராஜபக்ச குடும்பம் அவரை அரவணைத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கோடிகளை அள்ளிவீசி, பணபலம் மூலம் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய பொருளாதார பலமும் தம்மிக்க வசமே உள்ளது.

பதவிகள் பறிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்ட தலைவரான பிரசன்ன ரணதுங்க, காலி மாவட்ட தலைவரான ரமேஷ் பத்திரண, அநுராதபுர மாவட்ட தலைவர் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவும், களுத்துறை மாவட்ட தலைவராக ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நிபுன ரணவக்கவும் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி

மக்கள் போராட்டத்துக்கு பிறகு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பேரெழுச்சி பெற்றிருந்தது. அந்த எழுச்சியோடு அனைத்துவிதான அஸ்திரங்களையும் அக்கட்சி முன்கூட்டியே ஏவிவிட்டது.

இதனால் தற்போது அக்கட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு அலை ஓரளவு குறையத்தொடங்கியுள்ளது. முன்கூட்டியே பிரமாண நிகழ்வுகளையெல்லாம் நடத்தி முடித்துவிட்டதால் தற்போது நிகழ்வுகளை நடத்தினால்கூட அது பேசுபொருளாகமாறும் நிலையும் இல்லை. எனவே, தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அக்கட்சி புதிய யுக்திகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது.