ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடு தலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப்போன்று, ஏனைய அரசியல் கட்சிகளை உடைத்தமை யைப்போன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என ராஜபக்சக்களின் அரசியல் வாரிசான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் கூற்று முழுமையிலும் சரியானது.
ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபர் எப்போதும் பலமானவர் அல்லர். எதிரியை விட அவர் பலவீனமானவர்தான். இந்த உண்மையைத் தெரிந்துள்ள ரணில், எதிரியைத் தன்னைவிடப் பலவீனப்படுத்துவதன் ஊடாக தன்னைப் பலசாலியாக காட்டிக்கொள்பவர்.
காலாதிகாலமாக அதைத்தான் அவர் செய்து வருகின்றார். இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதைச் செய்யத்தான்போகிறார். ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரைத் தன்பக்கம் பிரித்து எடுத்துவிட்டார்.
சஜித்திடமிருந்து பொன்சேகாவை கழற்றி தனி வழியில் அலைய விட்டுவிட்டார். சுதந்திரக் கட்சி என்ற ஒன்றே இல்லாமல்போகுமளவுக்கு குட்டையை குழப்பிவிட் டிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அநுர கோலோச்சினாலும், அங்கிருந்து சில பிரிவினரை உடைத்து வெளியே எடுத்திருக்கின்றார். இதன் ஓர் அங்கமாகவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உடைக்கும் கைங்கரியத்தை ரணில் முன்னெடுத்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச விலகிய பின்னர் அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மஹிந்தவே.
அதேபோன்று கோத்தாபய தப்பியோடிய போதும், ரணிலை ஜனாதிபதியாக்குவதில் தீவிரமாக உழைத்தவரும் மஹிந்தவே. அன்றைய சூழ்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் மக்கள் முன் தலைகாட்ட முடியாத நிலைமையே இருந்தது. அப்போது அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். அவரை விட வேறு தெரிவில்லை. ஆனாலும் ரணிலின் குணம் மஹிந்தவுக்கும் தெரியும். காலத்தின் நிர்ப்பந்தத்தால் ரணிலுக்கு மொட்டு முட்டுக் கொடுத்தது. இப்போது அதற்காக அனுபவிக்கின்றனர்.
ரணில் செய்யும் ‘பிளவுகளின் ஊடான பலவீனப்படுத்தும்’ அரசியலை, ராஜபக்சக்களும் சில காலங்களுக்கு முன்னர் முன்னெடுத்திருந்தனர். இப்போது சுதறும் நாமல் ராஜபக்ச, தனது தந்தை மஹிந்த ராஜபக்ச 2006ஆம் ஆண்டிலிருந்து என்னென்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து, எந்தெந்தக் கட்சிகளைக் கூறுபோட்டார்?
சாம, தான, பேத, தண்ட வழிகளைப் பாவித்து யார் யாரையெல்லாம் தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்தார் என்பதை நினைவுகூர்ந்தால் நல்லது. கட்சிகளிலிருந்து ஆட்களை தம்பக்கம் வளைத்துப்போட்டு தம்மை மேலும் பலசாலியாக்கிக்கொண்டவர் மஹிந்தர்.
ஐக்கிய தேசியக் கட்சியை அதுவும் ரணிலிடமிருந்து பீரிஸ் தலைமையில் டசின் கணக்கானோரை 2006ஆம் ஆண்டு இழுத்தெடுத்த வரும் மஹிந்தவே. அப்போது செய்ததற்கு இப்போது ராஜபக்சக்கள் அனுபவிக்கின்றனர். அன்று அவர்கள் செய்யும்போது இனித்தது இப்போது அவர்களுக்கு நடக்கும்போது கசக்கின்றது. காலம் மாறியிருக்கின்றது. வினை விதைத்தவர்கள் அதை அறுவடை செய்தே தீரவேண்டும். அதைத்தான் இப்போது ராஜபக்சவினர் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.