அரசமைப்பில் விடப்பட்ட ஒரு தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமது தற்போதைய பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு சுலபமாக நீடிக்க முடியும் என சில சட்ட வட்டாரங்கள் சுட்டுகின்றன.
அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய எதிரணியின் பொது வேட்பாளராகக் களம் இறங்கிய மைத்திரி பால சிறிசேன, அதுவரை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து ஜனாதிபதியானார்.
அச்சமயத்தில் ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாக இருந்தது. அதனை ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கும் ஏற்பாடு 28 ஏப்ரல் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசமைப்பு திருத்தினால் கொண்டுவரப்பட்ட போது அரசமைப்பில் ஒரு தவறு விடப்பட்டதாகக் கூறப்பட்டது. அது தவறுதலாக விடப்பட்டதா அல்லது வேண்டுமென்றே அப்படி விடப்பட்டதா என்று கேள்வி இப்போது எழுகின்றது.
19ஆவது திருத்தத்துக்கு முன்னர் வரை ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகவே இருந்தது. அது வரையில், ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெற வேண்டும் என்றே அரசமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசமைப்பின் 83 (ஆ) சரத்து இது குறித்து விவரித்திருந்தது. எனினும் 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண் டுகளாக குறைக்கும் திருத்தம் கொண்டுவரப் பட்ட போது இந்த 83 (ஆ) சரத்தில் ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்பது ‘ஐந்து ஆண் டுகளுக்கு மேல்’ என்று மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 83 (ஆ) சரத்து அப்படி மாற்றம் ஏதும் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது.
இது கவனிக்காமல் விடப்பட்ட தவறாக இப்போது சில வட்டாரங்கள் கூறினாலும், அது தெரிந்தே – வேண்டுமென்றே – அப்படி விடப்பட்டது என சம்பந்தப்பட்ட வட்டா ரங்கள் முணுமுணுக்கின்றன.
இந்த 83 (ஆ) பிரிவு அரசமைப்பில் இருக்கும் வரை 6 ஆண்டுகளுக்கு மேல் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதாயின் மட்டுமே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெற வேண்டிய தேவை ஏற்படும் என்று சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி ஒருவரின் தற்போதைய ஐந்து வருட ஆட்சி காலத்தை ஆறு வருடத்திற்கு உட்பட்ட ஒரு காலத்துக்கு நீடிப்பதற்கு வெறுமனே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் ஓர் அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தால் – சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமலேயே – அதை சுலபமாக சட்டமாக்க முடியும். இதுதான் இப்போதைய நிலைமை.
இந்த 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட சமயம், அந்தத் திருத்த விவ காரத்தை முன்னெடுத்துக் கையாண்ட நல்லாட்சி அரசு தரப்பின் உயர் மட்டங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது.
அன்னியோன்யம் நிலவியது. நல்லாட்சித் தரப்புக்குள் நல்லுறவு நீடித்தது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட இருந்தது. அந்தப் பொதுத்தேர்தலின் மூலம் நல்லாட்சி அரசை வலிமையாக நிறுவி, அதன் கீழ் புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டமும் அப்போது முகிழ்த்திருந்தது. பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கு காலம் இழுபட்டால், அப்போது ஜனாதிபதி யின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை ஏற்படலாம், அத்தகைய சந்தர்ப் பத்தில் மைத்திரியின் பதவிக்காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் அரசமைப்பு திருத்தம் ஒன்றின் மூலம் நீடிக்கும் வாய்ப்பாகவே, இந்த ஏற்பாடு மாற்றப்படாமல் அப்படியே விடப் பட்டதாக இப்போது கூறப்படுகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக, தன்னைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களுடன் முரண்பட்டு அந்த வாய்ப்பை மைத்திரி இழந்து போனார். ஆயினும், அவருக்காக அந்த வாய்ப்பை அப்போது ஒரு திறப் பாக அரசமைப்பில் வைத்திருந்த சூத் திரதாரி ரணிலுக்கு அது நன்கு தெரிந் திருந்தது. இப்போது நாடாளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைத் திரட்டும் தந்திரம் அவருக்கு இருக்கும் என்றால் சுலபமாக தமது பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு அவர் நீடித்து விடுவார் என்பதுதான் நிலைமை.
எனினும், இதற்கான சாத்தியம் இல்லை எனவும், திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை பிற்போட முற்பட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.