செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துத்தான் இலங்கை அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் சத்தம் சந்தடியின்றி, அதை முந்திக்கொண்டு, திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கொழும்பில் விடயமறிந்த உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.
மொட்டுக் கட்சியின் ஸ்தாபகரும், அக் ஷகட்சியின் அரசியல் சாணக்கியருமான பஸில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள், செயற்பாடுகள், நகர்வுகள் போன்றவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளமையை உணர்த்துகின்றன என்று சுட்டுகின்றன அந்த வட்டாரங்கள்.
கடந்த சனிக்கிழமை நான்காம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மைக் காலத்தில் ஐந்தாவது தடவை யாக சந்தித்துக் கலந்தாலோசனை நடத்திய பின்னர் பஸில் ராஜபக்ஷ தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறு சிறு குழுக்களாக அழைத்துக் கருத்துப் பரி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகின்றது.
திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்களைச் செய்யும்படி அவர் சம்பந்தப்பட்ட எம்.பிக்களை நெறிப்படுத் துகின்றார் என்று கூறப்படுகிறது. இப்போது திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் எந்தக் கட்சிக்கும் தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக் கக் கூடிய வாய்ப்புக் கிட்டாது என்றும் – அந்த அரசியல் குழப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி, தமக்கு சாதகமான ஒரு தரப்பை ஆட்சியில் அமர்த்தி, அந்தத் தரப்பின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிப தித் தேர்தலை எதிர்கொள்வது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பானது என்றும் – பஸில் ராஜபக்ஷ தரப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை கூறி வருகிறது என்றும் – தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்புலத்தில் உடனடி அதிரடிப் பொதுத் தேர்தல் அறிவிப்பினால் வரக் திடீர்ப் பொதுத் தேர்தல்….? கூடிய பிரச்சினைகள், நிலைமைகள், சாதகங்கள், பாதகங்கள் குறித்தெல்லாம் புலனாய்வுத் தரப்பினருடனும் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடனும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடி வருகின்றார் என்றும் கூறப்படுகிறது.
இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான முடிவு எதையும் இன்னும் எடுக்கவில்லையாயினும் – ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேவையானால் அதிரடியாகப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுவதற்கான கதவை அவர் இன்னும் மூடவில்லை, திறந்தே வைத்துப் பார்த் திருக்கின்றார் என்பதுதான் முக்கியமானது. எது, எப்படி என்றாலும் இன்னும் ஐந்து மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதி. அதை எதிர் கொள்வதற்கு வசதியான களச்சூழல் தமக்கு இன்னும் கிட்டவில்லை என்ற தடுமாற்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்பதும் வெளிப்படையான உண்மை.
அந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், அதிரடிப் பொதுத்தேர்தல் நடத்தி, அதன் முடிவுகளால் வரக்கூடிய களச் சூழலை ஜனாதிபதி தேர்தலில் தமக்குத் தேவையான நிலைமைக்கு மாற்றலாம் என்ற நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படுமானால், அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலை ஜூன் மாதக் கடைசி யிலோ ஜூலை முற்பகுதியிலோ நடத்து வதற்குப் பின்னிற்க மாட்டார் என்று மேற்படி வட்டாரங்கள் விளக்குகின்றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது ஒரு பொதுத் தேர் தலை எதிர்கொண்டால், தமது கட்சி கணிசமான எம்.பி. பதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவரின் ஐ.தே. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எண்ணுகின்றனர். அவர்களும் ஜனாதி பதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர் தல் நடத்தத் தமது கட்சித் தலைவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். மொட்டுக் கட்சியினர் மற்றும் தனது ஐ.தே.கட்சியின் மூத்த தலைவர்களின் நச்சரிப்புத் தாங்காமல் பொதுத் தேர்தல் அறிவிப்பை எச்சமயத்திலும் ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டா லும் வெளியிடக் கூடும் என்பதுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலைவர மாக இப்போது உள்ளது.