ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.
விஜயதாச ராஜபக்சவின் இந்நியமனத்தை சு.கவின் உப தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், கொழும்பு மற்றும் அத்தனகல தொகுதி அமைப்பாளர்களும் இதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மைத்திரி அணி, சந்திரிக்கா அணி, நிமல் அணி, தயாசிறி அணி என ஏற்கனவே பல அணிகளாக சுதந்திரக்கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் தற்போது விஜயதாச ராஜபக்சவின் நியமனத்தால் மற்றுமொரு அணியும் உதயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ச தமது கட்சியில் உறுப்புரிமை பெற்றது தமக்கு தெரியாது எனவும், தமது நலன்களுக்காக மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியை விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் எனவும் சுதந்திரக்கட்சி செயற்பாட்டாளர்கள் சிலர் விமர்சித்துவருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று (21) கூடியது.
சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
எனினும், தலைமைக்குழுவுக்குரிய ஆசனத்தில் அவர் அமரவில்லை. கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உரிமை உள்ளது என மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்திருந்தார்.
நிறைவேற்றுக்குழு கூட்டத்துக்கு முன்னர் நேற்று முன்தினம் (20) அரசியல் குழு கூடியுள்ளது. இதன்போது பதில் தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது எனக் கூறி, அந்த யோசனை நிறைவேற்றுக்குழுவில் முன்வைக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இக்கூட்டத்தின்பின்னர் உரையாற்றிய விஜயதாய ராஜபக்ச, சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன் என சூளுரைத்தார். அதேபோல பிளவுபட்டிருக்கும் கட்சியை ஐக்கியப்படுத்துவார் எனவும் சபதமெடுத்தார்.
எனினும், பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை நிமல் சிறிபாலடி சில்வா அணி எதிர்த்துள்ளது.
“ விஜயதாச ராஜபக்ச திருட்டுதனமாகவே கட்சி உறுப்புரிமையை பெற்றுள்ளார்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கூறினார்.
தமது தரப்பு நிமல் சிறிபாலடி சில்வாவை பதில் தலைவராக நியமித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அரசியல் சபையால் மட்டும் பதில் தலைவரை நியமிக்க முடியாது என்று சுதந்திரக்கட்சியின் தற்போதைய பதில் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால சுட்டிக்காட்டினார்.
எது எப்படி இருந்தாலும் ஏற்கனவே பிளவுபட்டிருந்த சுதந்திரக்கட்சி தற்போது மேலும்மொரு சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த இடியப்ப சிக்கலில் இருந்து கட்சியை விஜயதாச மீட்பாரா அல்லது ஐதேகவிடம் அடகு வைப்பாரா என்பதே மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நீதி அமைச்சர் பதவியை வகிக்கும் ஒருவர் அவருடன் வந்து கட்சி தலைமையை ஏற்பது, நீதித்துறைமீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.