நம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை உள்வாங்காமல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியால் குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் தேவைக்கேற்ப தற்போதைய சபாநாயகர் அரசமைப்பை அப்பட்டமாக மீறி செயற்படுகின்றார் என்பதே பிரதான குற்றச்சாட்டாகும். நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்பதை கருத்திற்கொள்ளாமல் சட்டத்தை சான்றுரைப்படுத்தியமை பிரதான விடயமாகும்.

சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் அரசியல் நோக்கில் செயற்படுவது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இழைத்துள்ள பெரும் தவறாகும் என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல விவாதத்தின்போது சுட்டிக்காட்டி இருந்தார். சபாநாயகர் பதவியை வகிப்பவரே நாடாளுமன்றத்தின் பிரதானி. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரே சபாநாயகராக தெரிவுசெய்யப்படுவார். அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட நபர் அரசியல் கட்சி சார்பில் செயற்படக்கூடாது என்பது வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சிமுறை சம்பிரதாயமாகும். எனினும், இந்த நடைமுறைக்கு மாறாக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன மாத்தறை மாவட்ட அரசியல் நடவடிக்கையில் பங்கேற்றார். மாவட்ட அபிவிருத்திக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டார். அதுமட்டுமின்றி ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சிக்கு தேவையான விதத்தில் சபாநாயகர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் நியமனம்
2024 பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்ற அரசியலமைப்பு சபை கூட்டத்தின்போது, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதன்போது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன செயற்பட்ட விதம் பற்றியும் விவாதத்தின்போது அதிகம் பேசப்பட்டது.

தேசபந்து தென்னக்கோனின் பெயரை அங்கீகரித்து சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவால் ஜனாதிபதிக்கு அனுப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தை விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியலல் சபையில் சமர்ப்பித்தார். இதன்படி அரசமைப்புக்கு முரணான வகையிலேயே சபாநாயகரின் அணுகுமுறை இருந்துள்ளது என தெரியவருகின்றது.குறித்த கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு வார இதழொன்று தலைப்பு செய்தியை வெளியிட்டிருந்தது. குறித்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் என கீழ்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான மேற்படி கடிதத்தில் நீங்கள் செய்த பரிந்துரை இன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உங்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு ஆதரவாக நான்கு உறுப்பினர்களும், பரிந்துரைக்கு எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் இருந்து ஏனைய இரண்டு உறுப்பினர்களும் விலகி இருந்தனர்.
  2. இதற்கமைய உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை அங்கீகரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு 5 உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை.
  3. அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதற்கு ஏற்பாடு இல்லை. எனவே, வாக்கெடுப்பில் இருந்து விலகிய இருவரும் எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர் என கருதும் பட்சத்தில் அரசமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் எனது வாக்கை ஆதரவாக வழங்குகின்றேன்.

சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களானவை, ஜனாதிபதியும், சபாநாயகரும் அரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளனர் என எதிரணி தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

அரசமைப்பு பேரவையில் வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போதே அதன் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் தனக்குரிய தீர்மானிக்கும் வாக்கை பயன்படுத்த முடியும். ஆனால் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்த இருவரும், எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர் எனக் கருதி வாக்களித்தமை அரசமைப்புமீறும் செயல் என்றே எதிரணிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

பெப்ரவரி 26 ஆம் திகதி அரசமைப்பு பேரவையில் என்ன நடந்தது என்பது தொடர்பான கூட்ட குறிப்பை விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், நிமல் சிறிபாலடி சில்வா, சாகர காரியவசம், கபீர் ஹாசீம், கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத்தவிர அரசமைப்பு பேரவையின் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, நாடாளுமன்றத்தின் உதவி செயலாளர் அங்ச அபேரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே, பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் கனிக்கா டி சில்வா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் எனக் கூட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சபையின் அழைப்பின் பேரிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை அப்பதவிக்கு நியமிக்கப்பதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த பரிந்துரை தொடர்பில் ஆராய்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலாநிதி பிரதாப் ராமானுஜன் இது தொடர்பில் முதலில் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன், வழக்கு விசாரணை முடியும்வரை ஜனாதிபதியின் பரிந்தரை தொடர்பில் தீர்மானம் எடுப்பது பிற்போடப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார். கூட்டத்தில் பங்கேற்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஒன்லைன் ஊடாக கூட்டத்தில் பங்கேற்றிருந்த கபீர் ஹாசீம் ஆகியோர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

எனினும், பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர ஆகியோர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர். கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். இதன்படி நால்வர் ஆதரவாகவும், இருவர் எதிராகவும், இருவர் விலகியும் இருந்துள்ளனர்.
அந்தவகையில் ஜனாதிபதியின் நியமனத்துக்கு அரசமைப்பு பேரவையில் அனுமதி கிட்டாமல் கூட்டம் முடிவடைந்துள்ளது. சபாநாயகர் தனது தீர்மானம்மிக்க வாக்கை பயன்படுத்துவதற்காக இருந்தால் அது பற்றி அரசமைப்பு பேரவையில் கருத்து வெளியிட்டிருக்க வேண்டும. அவ்வாறு செய்யாமல் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறு பல விடயங்கள் விவாதத்தின்போது அம்பமானாலும் தனது பதவியை சபாநாயகர் தக்கவைத்துக்கொண்டார். தனது அரசுக்கு எதிரான பிரேரணையே இது என்ற பார்வையே இது தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்துக்கு இருந்தது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் இந்த அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர் தற்போது சிறையில் உள்ளார்.

இவ்வாறான பிரேரணைகள் நாடாளுமன்றம்மீதான மக்கள் நம்பிக்கையை மென்மேலும் இல்லாது செய்யும். 225 பேரும் வேண்டாம் என மக்கள் கோஷம் எழுப்பிய காலப்பகுதியை நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கத்துறையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் சபாநாயகர், போலி மருந்துகளை அரச வைத்தியசாலைகளுக்கு அனுப்பி மக்களின் உயிருடன் விளையாடும் அமைச்சர் ஆகியோரை பாதுகாப்பதற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் கௌரவம், அரசமைப்பின் உயரித தன்மை என்பவற்றை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.