பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்கு மத்தியில் நிகழ்நிலை (ஒன்லைன்) காப்புச் சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசு நிறை வேற்றி இருப்பதாக அறிவித்துள்ள போதிலும் – அந்தச் சட்ட மூலத்தில் அது நிறைவேற்றப் பட்டதாக சான்றளித்து ஒப்பமிட்டு, சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளமையை சபாநாயகர் உறுதிப்படுத்தி உள்ள போதிலும் – விடயம் முடிந்து விடவில்லை. இன்னும் சூடு பிடிக் கத் தொடங்கியுள்ளது.
சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும், அப்படி யாயின் அதை மாற்றுங்கள் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசுக்கு வழிகாட்டல் வழங்கி இருக்கின்றது. இலங்கை அரசை அதன் மனித உரிமைகள் பேணுவது தொடர்பான கடப்பாடுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் நிகழ்நிலை காப் புச் சட்டத்தை திருத்தி அமைப்பது குறித்து பரிசீலிக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் அலு வலகம் கோரியுள்ளது.
இலங்கை அரசு கொண்டுவந்துள்ள நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம் நாட்டில் கருத்து வெளியிடும் சுதந்திரம் உட்பட மனித உரிமை கள் விடயத்தில் எல்லை கடந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அதன் எக்ஸ் பதிவில் குறிப்பிட் டுள்ளது.
“(இந்த விவகாரத்தை ஒட்டி) சிவில் சமூகம் மற்றும் தொழில் குழுக்கள் வெளிப்படுத்தி வரும் கவலைகள், கரிசனைகளை நிவர்த்தி செய் வதற்கும், மனித உரிமைகள் தொடர்பான கடப் பாடுகள், கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதை பரிசீலிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலி யுறுத்துகிறோம்” என்றும் அந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவி னால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து நேற்று முதினம் சட்டமாக்கப்பட்டது. சபாநாயகர் சான்றளித்த சட்டமூலத்தை பரிசீலித்த சட்ட வட்டாரங்கள் அந்தச் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண் டும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய 9 விடயங்கள் திருத்தப்படவே இல்லை என்று பூர்வாங்கத் தகவல்களை வெளியிட்டுள்ளன.
செய்யப்படாத திருத்தங்கள் பற்றிய விவரங் களை அந்தச் சட்டவட்டாரங்கள் பெரும்பாலும் இன்று விவரமாக அட்டவணைப்படுத்தி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின் றது. ஆயினும், உயர்நீதிமன்ற வழிகாட்டலைப் பின்பற்றாத நிலையில் நாடாளுமன்றத்தினால் நாடாளுமன்ற நாடகம் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகரி னால் சான்றளிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நீதிமுறையில் சவாலுக்கு உட்படுத்தி மாற்றி யமைப்பது சட்டரீதியில் இலகுவானதல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் ஒன்றின் செயல்படுதன்மை அல்லது பொருத் தப்பாடு பற்றிய விடயத்தை உயர் நீதிமன் றம் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்ப தால் இது விடயத்தில் சட்ட ரீதியான நிவா ரணம் தேடுவது சுலபமானது அல்ல. இந்த சர்ச்சை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மூன்று விதமாக நடக்கலாம்.
ஒன்று – உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி யுள்ள திருத்தங்கள் செய்யப்படவில்லை என்று அவற்றை வரிசைப்படுத்தி, மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் போகலாம். ஆனால் அந்த வழியில் உயர் நீதிமன்றம் ஏதேனும் சட்ட ரீதியான நிவாரணம் வழங்க முடியுமா என்பது சந்தேகமே. இரண்டாவது – உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல் படி நிறைவேற்றப்படாத ஒரு சட்டமூலத்தை அது நிறைவேறியதாக சான்றளித்த சபாநாயகருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க் கட்சிகள் கொண்டு வந்து, அந்த விவகாரத் தின் மூலம் இவ்விடயத்தில் அரசு தரப்பின் திருகுதாளங்களையும் அதற்கு இணங்கி செயற்பட்ட சபாநாயகரின் போக்கையும் அம்பலப்படுத்தலாம்.
தேர்தல் சமயத்தில் இந்த நடவடிக்கை ஆளுந்தரப்புக்கு பெரும் சங்கடங்களை நிச்சயம் தரும். மூன்றாவது – இந்த சர்ச்சைகளை தவிர்ப்ப தற்காக இந்தச் சட்டத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டலுக்கு முரணாக முன்னெடுக்கப் பட்ட பிரிவுகளை அரசாங்கமே ஒரு திருத்தச் சட்டமுலமாக சமர்ப்பித்து, நிறைவேற்றி, ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் கோரிக்கையை யும் அரசு ஏற்றுச் செயற்பட்டதாக அது அர்த்தப்படுத்தப்படும். ஏற்கனவே இப்போது நிறைவேற்றப்பட் டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிகழ் நிலை காப்புச் சட்டமூலம் நாடாளுமன் றுக்குக் கொண்டுவரப்பட்டு, அவசர அவசர மாக அதை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப் பட்ட சமயம், அதை ஒட்டி கட்சித் தலைவர் கள் கூட்டத்தில் காரசாரமான விவாதங்க ளுக்கு மத்தியில், சட்டமூலத்தைச் சமர்ப் பித்தபொதுபாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந் தார். இந்தச் சட்ட மூலத்தில் பெரிய தவறுகள், முரண்கள், பிழைகள் இருந்தால் காலகதி யில் சட்டத் திருத்தங்கள் மூலம் அவற்றை திருத்துவோம் என்று அப்போது அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்தச் சட்டத்தினால் அரசுக்கு ஏற்பட் டிருக்கும் அசௌகரியங்கள், சங்கடங்களை அரசே தவிர்ப்பதற்கு இதுதான் உசிதமான – பொருத்தமான – வழி. அதை அரசுத் தரப்பு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து விரைந்து செய்வதே அரசுத் தரப்புக்கும் நல்லது.