‘வரி’ – சாதாரண மக்களிடம் சீறிப்பாயும் அரசு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் பதுங்குவது ஏன்?

நாட்டில் இயங்கிவரும் பிரபலமான-பிரதானமான 10 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 678 கோடி ரூபாவுக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. எனினும், கலால் திணைக்கள அதிகாரிகளின் ஆசியுடன் மேற்படி நிறுவனங்கள் வரி செலுத்தாமல் சில காலமாக வரி ஏய்ப்பு செய்துவருகின்றன. இது தொடர்பில் கலால் திணைக்களத்தில் உள்ள இரண்டாம்நிலை அதிகாரி ஒருவரிடம் ஒரு மாதத்துக்கு முன்னர் வினவியபோது, நிறுவனங்களை பாதுகாக்கும் பாணியிலேயே பதிலளித்துள்ளார். பல்பொருள் அங்காடிகளில் இருந்து பணம் வர சிறிது காலம் எடுக்கும் என்று அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறும்போது, “அப்படியா, நிலைமை அதுவென்றால் எப்படி வருட கணக்கில் வரி ஏய்ப்பு இடம்பெறுகின்றது.” என கட்டுரையாளர் வினவியுள்ளார். இதற்கான பதில் அவரிடம் இருக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட முறையில் உரிய ஏற்பாடுகளைப் பயன்படுத்தி வரி வசூலித்தால், அரசுக்கு வருமானம் கிடைக்கப்பெறும். எனினும், வரி செலுத்தாமல் இருப்பதற்கு குறித்த நிறுவனங்கள், கலால் திணைக்கள அதிகாரிகளின் பைகளை நிறைக்கும் செயலில் ஈடுபட்டுவருகின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.

வழிவகைகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்ட பின்னர், அவரும் அவர் தலைமையிலான குழு உறுப்பினர்களும் குறித்த வரி மோசடியாளர்களை உரிய வகையில் வரி வலைக்குள் சிக்க வைப்பதற்கு காத்திரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்விளைவாக வரி செலுத்தாமல் இருந்த மதுபான நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கும், நிலுவை தொகையை கட்டங்கட்டமாக செலுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டது. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசியல்வாதியொருவரின் டீல் காரணமாக இந்த முயற்சியில் பின்னடையு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் கலால் திணைக்களம் முன்வைத்த காலை, பின்நோக்கி எடுத்துள்ளது.

பார்களிலோ, பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது கிராமங்களில் சாராயம் விற்கும் நபர்களிடமோ மதுபானத்தை எவரும் கடனுக்கு வாங்குவதில்லை. சாராயம் வியாபாரம் என்பது கடனுக்கு நடக்காத வியாபாரமாக இருக்கும் நிலையில், அதனை வாங்கும் வாடிக்கையாளர்கள் வரிகளையும் செலுத்துகின்றனர். மதுபோத்தலொன்றுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 75 வீதம் வரியாகும். அதாவது அரசுக்கு செல்ல வேண்டிய 75 வீதத்தை நிறுவனங்கள் தம்வசம் வைத்துக்கொள்கின்றன. அப்படியானால் வாடிக்கையாளர்கள் வரி செலுத்தி இருப்பது அரசுக்கு அல்ல நிறுவனதுக்கே…மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருப்பது பாரதூரமான குற்றம் என்பதுடன், அதனை உரிய வகையில் பெறாத கலால் திணைக்களத்தின் செயற்பாடும் பாரிய குற்றமாகும்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குழுவினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய நடவடிக்கையாகும். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உட்பட அத்திணைக்களத்தின் அதிகாரிகள், நிதியமைச்சின் செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கணக்காய்வாளர் நாயகம் மற்றும் 10 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பிரதானிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கு கிடைக்க வேண்டிய மொத்த வரி வருமானத்தில் சுமார் 101 பில்லியன் ரூபாவை அரசு இழந்துள்ளது எனவும், இதில் 26 மில்லியன் ரூபா மதுவரியெனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், 10 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 678 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதுவரியை செலுத்த தவறியுள்ளதாகவும், குறித்த நிறுவனங்களிடமிருந்து அந்த வரியை அறவிடும்படி உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
வரியை செலுத்த தவறியுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களால் செலுத்தாமல் உள்ள வரி தொகை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு கலால் திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவிடுமாறும், இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்;ப்பு வழங்கப்படும்வரை மேற்படி நிறுவனங்களுக்கான அனுமதி பத்திரத்தை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனம், வயம்ப டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனம், குளோபல் பிளெண்டர்ஸ்; மற்றும் பாட்டிலர்ஸ் தனியார் நிறுவனம், மெக்கலம் ப்ரூயிங் நிறுவனம், களுத்துறை டிஸ்டில்லரீஸ் நிறுவனம், பின்லாந்து டிஸ்டில்லரீஸ் கார்ப்பரேஷன் தனியார் நிறுவனம், சினெர்ஜி டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனம், ரந்தெனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா நிறுவனம், ஹிஹ்குரான டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனம், ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனம் என்பனவே வரி செலுத்தாமல் உள்ள நிறுவனங்களாகும். தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்படி 10 மது உற்பத்தி நிறுவனங்களும் 678 கோடி ரூபாவுக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

நாட்டு பிரஜைகளுக்கு வரி கோப்பு திறப்பதற்கும், வரி இலக்கம் வழங்குவதற்கும் தீவிரம் காட்டும் அரசு, இப்படியான நிறுவனங்களிடம் இருந்து வரியை அறிவிட்டுக்கொள்வதில் உரிய தலையீடுகளை செய்வதில்லை. அரச நிதி தொடர்பில் பொறுப்புள்ள நாடாளுமன்றமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. சாதாரண மக்கள் மட்டுமா வரி செலுத்த வேண்டும்? செல்வந்தர்களுக்கும் அவர்களின் மது உற்பத்தி நிறுவனங்களுக்கும் நாட்டின் வரிக்கொள்கை ஏற்புடையதாக அமையாதா? உயர்நீதிமன்றமாவது இப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும்.