சைக்கிளில் சபைக்கு வருபவர்களுக்கு மாளிகைகள் சொந்தமாவது எப்படி?

இலங்கையில் நடப்பவை விசித்திரமான சம்பவங்களாக இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாகி, சபைக்கு சைக்கிளில் வருபவர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பெரிய மாளிகைக்கு சொந்தக்காரர்களாகின்றனர். சைக்கிளில் கொழும்பு வந்து, ரேஞ்ச் ரோவரில் கிராமத்துக்குச் செல்கின்றனர். இவை எப்படி நடக்கின்றன? நாம் அனைவரும் அவ்வாறு சிந்திப்பதாக தெரியவில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு அண்மையில் டுபாயில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த இலங்கை அரசியல் பிரமுகர் ஒருவர், மாநாட்டின் பின், டுபாயில் உள்ள தனது சொகுசு வீட்டில்தான் தங்கி இருந்தாராம். இந்த வீட்டை வாங்க எவ்வாறு பணம் கிடைத்திருக்கும் என்பது எனது கேள்வியாகும். பதில் ‘அரசியலாம்’ .

இதைப்பற்றி சிந்தித்தவாறு பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தேன். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீடு குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி மிகவும் விசித்திரமான கட்டுரை ஒன்று அந்த நாளிதழில் வெளியாகி இருந்தது. கணக்காய்வாளர் நாயகத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில், நீதி அமைச்சின் கீழ் உள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீடு தொடர்பான குறிப்பை பின்வருமாறு மேற்கோள் காட்டலாம். அதன் தலைப்பு ‘இழப்பீடு அமெரிக்க டாலர்களில் அல்ல, உள்ளூர் நாணயத்தில்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

MV X-Press Pearl கப்பல் விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஆஸ்திரேலிய சட்ட நிறுவனத்துக்கு 77 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட நிறுவனத்துக்கு பெருந்தொகை செலுத்தப்பட்டுள்ளபோதிலும், இழப்பீட்டை டொலர்களில் பெறாமல் ரூபாவில் பெற்றுள்ள விவகாரமும் சர்ச்சையாக உள்ளது.

இந்த கப்பல் குறித்தும், இழப்பீடு சம்பந்தமாகவும் கடந்த காலங்களில் பொது களத்தில் ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டன. கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சுக்கு பொறுப்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே செயற்படுகின்றார். கப்பல் விபத்துக்கு பிறகு நடந்த இழப்பீட்டுப் போரைப் பற்றி அவர் நாடாளுமன்றத்தில் பல சர்ச்சைக்குரிய கதைகளைக் கூறினார். நாமும் செவிமடுத்தோம். குறிப்பாக கப்பலின் காப்பீட்டாளரிடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும், சிஐடிக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அந்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது அமைச்சருக்கு மட்டுமே தெரியும். அதை பற்றி எமக்கு சிறு தகவல்கூட தெரியாது.

கப்பல் விபத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு இழப்பீட்டை பெறுவது தொடர்பில் இலங்கையில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய இறுதிநாள்வரை இழுத்தடிப்புகள் இடம்பெற்றதை அறிவோம். இறுதியில் உள்நாட்டில் வழக்கு தொடுக்காமல், ஆஸ்திரேலிய சட்ட நிறுவனமொன்றுக்கு 77 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டு சிங்கப்பூரில் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறியமுடிந்தது. எதற்காக சிங்கப்பூரில் வழக்கு தொடுக்கப்பட்டது என்ற வினாவும் எழுந்தது. இலங்கையில் நிபுணர்கள் குழுவால் மதிப்பிடப்பட்ட 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும், குறைவான தொகைக்கு இழப்பீட்டு தொகையை மட்டுப்படுத்த அரசியல் சக்திகள் முற்படலாம் என்பதாலேயே வழக்கு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில் இழப்பீட்டு தொகையை குறைப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் பிரிட்டனில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் உரிய நேரத்தில் – உரிய வகையில் இலங்கை தலையீடு செய்யவில்லை. இறுதியில் கப்பலின் உரிமையாளர்கள் மற்றும் காப்பீட்டாளர்களின் கோரிக்கை பிரிட்டன் நீதிமன்றம் ஏற்றது. இழப்பீட்டு தொகையையும் மட்டுப்படுத்தியது. என்ன நடந்தது என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

கப்பலின் உரிமையாளர் இலங்கையர் அல்லர், அதேபோல கப்பலின் காப்புறுதியாளர்கள் இலங்கையர்கள் அல்லாத பின்னணியில், இந்தக் கொடுப்பனவு உள்நாட்டில் எவ்வாறு பெறப்பட்டது? வெளிநாட்டு தரப்பு நிதியை, தனது உள்நாட்டு முகவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி இருந்தால் அந்த நபர் யார்? நிறுவனத்தின் பெயர் மற்றும் அது என்ன மாதிரியான நிறுவனம்? இவை தொடர்பில் தேடிபார்த்து சம்பந்தப்பட்ட தரப்புகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். டெய்சி ஆச்சியின் மாணிக்கக்கல் பொதி கதைபோல் இந்த விடயத்திலும் நடந்துவிடக்கூடாது. கறுப்பு பணத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சியும் இதன்மூலம் இடம்பெறக்கூடாது. எனவே, இது தொடர்பில் அரசு உடனடியாக விசாரித்து, வெளிப்படைதன்மையுடன் செயற்பட வேண்டும்.