இலங்கை விழுந்துள்ள ‘வங்குரோத்து’ குழியும் – மீள்வதற்கான IMF இன் ’16’ மந்திரமும்…!

இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்பது குறித்து புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவே, நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல என்ன காரணம்? பொருளாதார முகாமைத்துவத்தில் உள்ள பலவீனமா அல்லது இதன் பின்னணியில் இருப்பது அரசியல் பிரச்சினையா? என்பது பற்றி ஆராய வேண்டும். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் என்ன?

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள விரிவான கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக் கூட்டம் செப்டம்பர் 14 ஆம் திகதி,  இலங்கைக்கு வந்த ஐ.எம்.எப். பிரதிநிதிகளால் ஆரம்பிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு பிறகு பின்னர் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். 

ஆசிய நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், இத்தகைய அறிக்கையை தயாரித்து வழங்குவது இதுவே முதன்முறையாகும் என்ற பின்னணியில்,  IMF ஏன் அப்படி செய்ய நினைத்தது? 17 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடிய இலங்கை, 18 ஆவது தடவையும் கையேந்துவதற்கு வெட்கப்படாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்ததால்தான் அவ்வாறு செய்திருக்ககூடும். எனவேதான் இம்முறை சர்வதேச நாணய நிதியம் விடயங்களை ஆழமாக ஆராய்கின்றது.

கடன் திட்டத்தின் 2ஆம் தவணையை பெறுவதற்கு இலங்கை முக்கிய சில விடயங்களை செய்ய வேண்டும் என 100 விடயங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. மேற்படி வேலைத்திட்ட பட்டியலில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை இலங்கை 38 விடயங்களை மாத்திரமே செய்து முடித்துள்ளது என வெரிட்டர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆமை வேக அணுகுமுறையால்தான் 2ஆவது தவணை தாமதமாகியுள்ளது. கடன் தவணையை பெறுவதற்கு சாத்தியம் இருந்தாலும், நாய்களை குளிக்க அழைத்துச்செல்வதுபோல் இதற்கான பயணத்தை முன்னெடுத்தால் ஐ.எம்.எப். திட்டம் முழுமை பெறுமா என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.

அடுத்த வருடம் தேர்தல் வருடம் என்பதால் சர்வதேச நாணய நிதியம் கூறும் விடயங்கள் அனைத்தையும் செய்வது கடினம் என ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். காயத்துக்கு சத்திரசிகிச்சை செய்து குணமாக்குவதைவிடுத்து, ‘பென்டேச்’ போட்டுக்கொண்டாவது தற்காலிகமாக நகர்ந்துவிட வேண்டும் என்ற பாணியிலேயே இவ்விடயத்தில் ஆட்சியாளர்களின் அணுகுமுறை உள்ளது. 

இவ்வாறானதொரு நிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட நல்லாட்சி – மோசடி மற்றும் ஊழல் தடுப்பு அறிக்கை குறித்து முக்கிய தகவல்களை வெளிப்படுத்தினார்.  சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள 16 பரிந்துரைகளை இலங்கை எவ்வாறு செயற்படுத்துகின்றது என்பதிலேயே இத்திட்டத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த 16 பரிந்தரைகள் எவை? இலங்கை விழுந்துள்ள குழியில் இருந்து மீண்டெழ வேண்டுமானால் கட்டாயம் இவை நிறைவேற்றப்பட வேண்டும். இது அரசியல் ரீதியில் பலப்பரீட்சையாகவும் அமையக்கூடும்.

01. 2023 நவம்பருக்குள் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆலோசகர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை நிறுவுதல். 

02.  ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் 2024 ஜுலை மாதமளவில் இணையத்தில் வெளியிடுதல்.

03. குற்றவியல் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துதல்.

04. தேசிய கணக்காய்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளல்.

05. நிறுவன சட்டத்தின் பிரகாரம் தேவையான தகவல்கள் மற்றும் பொது வருவாய் உரிமைப் பட்டியலை தயாரிப்பதற்கான விதிகளை இறுதி செய்தலும், செயற்படுத்தலும்.

06. சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றி தேசிய கொள்முதல் சட்டத்தை 2024 டிசம்பருக்குள் அமுல்படுத்தல்.

07. போட்டிகரமான விலைமனு கொள்முதல் ஒப்பந்தங்களை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையை 2024 டிசம்பருக்குள் இணையத்தில் வெளிப்படுத்தல். 

08. 2024 மார்ச் மாதம் முதல், ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அனைத்து அரச கொள்முதல் ஒப்பந்தங்கள், முதலீட்டு சபையின்கீழ் வரிச் சலுகை பெறும் அனைத்து நிறுவனங்களின் பெயர்கள், வரிச் சலுகை வழங்கியதால் ஏற்பட்ட வரி இழப்பு எவ்வளவு, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பெறும் வரிச் சலுகை எவ்வளவு போன்ற தகவல்களை இணையதளத்தில் காட்சிப்படுத்தல், மேற்படி தகவல்கள் 06 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். 

09. பொது நிறுவன மறுசீரமைப்பு கொள்கையை உருவாக்குதல்.

10. வெளிப்படைதன்மை ஏற்படும்வரை, மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இடைநிறுத்தல் அல்லது நிறுத்தல்.

11.  பாராளுமன்றத்தில் முறையான அனுமதியின்றி அமைச்சர்கள் வரிகளை அறிமுகப்படுத்துவதை தடுக்கும் வகையில் வரி விதிப்பு சட்டத்தில் திருத்தம் செய்தல்.

12. வருமானம் வசூலிக்கும் அனைத்து திணைக்களங்களிலும், ஊழல் – மோசடிகளை தடுப்பதற்காக குறுகிய கால ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

13. ஊழியர் சேமலாப நிதியத்தை மத்திய வங்கியின் நேரடி முகாமைத்துவத்தில் இருந்து எடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை 2024 ஜுன் மாதத்துக்குள் சமர்ப்பித்தல்.

14. வங்கித் துறை மற்றும் நிதித் துறையின் மேற்பார்வைக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துதல்.

15. 2024 டிசம்பருக்குள், டிஜிட்டல் நிலக்கோப்பைத் திறந்து, அது தொடர்பான தகவல்களை இணையத்தில் காட்சிப்படுத்தல்.

16. நீதிச் சேவை ஆணைக்குழுவின் வளங்கள் மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல்.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ள,  சர்வதேச நாணய நிதியத்தினால் கோரப்பட்டுள்ள இந்த விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆட்சியும் நிறைவேற்ற முடியுமா? இதில் பல விடயங்கள் அரசியல் கொள்கை மற்றும் எதிர்கால இலக்குகளுடன் தொடர்புபட்டவை. இலங்கை அரசாங்கம், எப்படி அரசியல் வலைக்குள் சிக்கியுள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்றுவதற்கு முற்படும் தலைவரும், அப்படியான அரசும் இப்படியான சீர்திருத்தங்களை செய்வார்கள் என்பதை நினைத்துகூட பார்க்க முடியாது.

நாம் விழுந்துள்ள குழியின் அளவை புரிந்துகொள்ளகூடிய தலைவர் ஒருவர் முதலில் தேவை. அதற்கேற்ப செயற்படக்கூடிய அரசும் தேவை. இவ்வாறான ஆட்சி முறைமை ஊடாகவே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.