உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினைiயை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
“ உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அறிமுகப்படுத்தும்போது அதற்கு இரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். எவ்வித பிரச்சினைக்கும் தீர்வை தேட விரும்பாத தெற்கில் உள்ள ஒரு தரப்பும், சர்வதேசத்தில் உள்ள டயஸ்போராக்களுமே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது பொய் எனவும், ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்காணிப்பு நாடகம் எனவும் டயஸ்போராக்கள் கூறுகின்றனர், இது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயல் என தெற்கில் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.” எனவும் அவர் கூறினார்.
“ எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இரு தீர்மானங்கள் உள்ளன. இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் சிற்சில சம்பவங்கள் தொடர்பில் அவர்கள் தனியாக சாட்சியங்களை திரட்டி, வழக்கு தொடுக்ககூடும். இலங்கையில் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது என்பதாலேயே இந்நடவடிக்கை என அவர்கள் கூறுகின்றனர். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஊடாக நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பொறிமுறையை இலங்கையில் உருவாக்க முடிந்தால், தென்னாபிரிக்காவில் போன்று அந்த ஆணைக்குழு முன்னிலையில் போரால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களும் தமது கதைகளைக் கூறலாம். உள்நாட்டில் தீர்வை நோக்கி பயணித்தால் சர்வதேச தலையீடுகளை தவிர்த்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலை வழங்கமுடியும். இதனை அடைவதே இதன் நோக்கம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் விவரித்துள்ளார்.
“ பிள்ளைகள் காணாமல் போய் இருந்தால் ஒன்று தேடி கொடுக்க வேண்டும், இல்லையேல் காரணம் கூற வேண்டும். இழப்பு நடந்திருந்தால் இழப்பீடு வழங்க வேண்டும்.இருண்ட யுகத்தில் தொடர்ந்து வாழ முடியாது. இருண்ட யுகத்தில் இருந்து மீள வேண்டும். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவினால் போரால் தமிழர்கள் மட்டும் அல்ல ஏனையோரும் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவரும். படையினரை பலிகடாவாக்குவதோ, ஜெனிவாவை ஏமாற்றுவதோ அல்ல, எமது பிரச்சினையை நாமே தீர்க்ககூடிய பொறிமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.