இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் – என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அத்துடன் யுக்திய நடவடிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
“ இலங்கையில் 1982 இல்தான் முதன்முறையாக ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் சுற்றுலா வழிகாட்டியொருவர், ஆனால் இன்று பாடசாலை செல்லும் வயதில் உள்ள மாணவர்கள் அதனை பாவிக்கும் அளவுக்கு சமூகத்துக்குள் போதைப்பொருள் ஊடுருவியுள்ளது. ஐஸ் போன்ற இரசாயன போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.” – எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
எனவே, போதைப்பொருட்களுக்கு முடிவுகட்டும் நோக்கில்தான் யுக்திய நடவடிக்கை ஆரம்பமானது, இலங்கை பொலிஸாரால் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்திலேயே யுக்திய நடவடிக்கை செயற்படுத்தப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களை கிராமங்களுக்கு பகிரும், விற்பனை செய்யும் வலையமைப்பில் உள்ளவர்கள் குறிவைக்கப்பட்டனர்,அவர்களின் பெயர் விவரம் இலங்கையில் உள்ள 45 பொலிஸ் பிரிவுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன,
இந்த வலையமைப்பில் உள்ள 60 வீதமானோர் யுக்திய ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
ஏனையோரும் இரண்டாம் மாத யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்படுவார்கள், போதைப்பொருள் விற்பனைக்கு முடிவுகட்டி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் உருவாகும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.
பின்வாங்கமாட்டோம் – அமைச்சர்
“ சர்வதேசத்தில் இருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும்.” – என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
“ யுக்திய செயல் திட்டத்தின் முதல் மாத நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. எனினும், யுக்திய நடவடிக்கயை முன்னெடுக்கும்போது பல தடைகளும் வருகின்றன, சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் வருகின்றன, நாட்டுக்கு எதிராக செயற்படும் சில குழுக்கள் உள்ளன, அந்த குழுக்களும் எதிர்க்கின்றன, எமக்கு எதிராக செயற்படுகின்றன, சமூகவலைத்தளங்களில் சேறுபூசுகின்றன. போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்களிடம் பணம் வாங்கும் தரப்புகளே இந்த செயலில் ஈடுபட்டுள்ளன.
யுக்திய நடவடிக்கையை நிறுத்துவதற்கு சில மதத்தலைவர்கள் முற்படுகின்றனர், சில சட்டத்தரணிகளும் தொடர்புபட்டுள்ளனர், அரசியல் கட்சிகளில் உள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளனர்.
அத்துடன் யுக்திய நடவடிக்கை என்பது ஊடக கண்காட்சி, நாடகம் என்றெல்லாம்கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது, அது பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை, போதைப்பொருளுக்கு முடிவு கட்டும்வரை எமது பணி தொடரும். ஒரு அடிகூட பின்வாங்கமாட்டோம்.” – எனவும் பொலிஸ் அமைச்சர் இடித்துரைத்தார்.
குற்றச்சாட்டு
“ ஓட்டையுள்ள விலையில் மீன்பிடிப்பது கடினம், அதுபோலவே தேசபந்து தென்னகோவின் யுக்திய என்ற வலையிலும் ஓட்டைகள் அதிகம் உள்ளன, அந்த வலையில் அப்பாவி மக்களே சிக்கிவருகின்றனர்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.
“ நாட்டில் பாதாளக்குழுக்கள், போதைப்பொருள் வியாபாரிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை சட்டப்பூர்வமாக இடம்பெறுவதை நாம் வரவேற்கின்றோம். எமது ஆட்சியிலும் சட்டப்பூர்வமான முறையில் நடவடிக்கை இடம்பெறும். ஆனால் யுக்திய நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைபெறுகின்றதா? பொலிஸார் தமது கடமைகளை இதுவரைகாலமும் சரிசர நிறைவேற்றி இருந்தால் யுக்திய என்ற நடவடிக்கை தேவைப்பட்டிருக்காது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர் ஆகும் கனவில் இருக்கின்றார், அவருக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன, இப்படியான ஒருவர்தான் பதில் பொலிஸ்மா அதிபராக இருக்கின்றார்.
நாரம்மல துப்பாக்கிச்சூடு தொடர்பில் காணாளி இல்லாது இருந்திருந்தால் அந்த சம்பவத்துக்கும் பொலிஸார் நிச்சயம் கதை கட்டியிருப்பார்கள், போதைப்பொருள் கடத்திச் சென்றவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகி இருக்கும்.
ஓட்டை வலையில் மீன்பிடிக்க முடியாது, தேசபந்துவின் யுக்திய வலையில் பல ஓட்டைகள் உள்ளன, அதில் சாதாரண மக்களே சிக்குகின்றனர், யுக்திய என்பது ஊடகத்துக்கான நாடகமாகும்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.