நல்லிணக்க முயற்சிக்கு தடையாக இருப்பது யார்?

” நாட்டில் நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 99 சதவீதமான பௌத்த பிக்குகள் சமாதானத்தையே விரும்புகின்றனர்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் உட்பட சில சட்டமூலங்கள்மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கிராம மட்டத்தில் நல்லிணக்கம் என்பது மிக முக்கியம். ஆனால் இன்று கிராமங்கள் இனரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக, கலாசாரம், அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன. இலங்கையில் 14 ஆயிரத்து 16 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவுகளில் நல்லிணக்க குழுக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பகுதிகளில் அவை அமைக்கப்படும்.

இலங்கை 30 வருடகால போரை சந்தித்த நாடு. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இலங்கை மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு இருக்கவில்லை என்பதாலேயே இந்நிலைமை ஏற்பட்டது. எனவே, ஒருமைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தப்படும்.

புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று நாட்டுக்கு வந்து எம்முடன் பேச்சு நடத்தினார்கள். மகாசங்கத்தினரையும் சந்தித்தனர். தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இது தொடர்பில் சமூகத்தில் நல்ல கோணத்தில் பார்க்கப்படுவதுடன், விமர்சனங்களும் உள்ளன.

நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இனவாதத்தை வெறுக்கின்றனர். ஐக்கியமாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் இதனை தடுப்பதற்கு சில சக்திகள் செயற்படுகின்றன. இனவாதத்தை தூண்டிதான் சில கட்சிகள் அரசியல் நடத்துகின்றனர். இனவாதம் என்பதுதான் அக்கட்சிகளின் இருப்பு. இன, மத பெயரில் கட்சிகள் நடத்தப்படுகின்றன.

அதேவேளை, நாட்டில் நல்லிணக்கத்துக்கு, ஒருமைப்பாட்டுக்கு பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து உலக மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 100 ,200 ‘வொயிஸ் கட்’ பிக்குகள் இருக்கலாம். அவர்கள் ஊடகங்கள் முன் வந்து பல்வேறு கருத்துகளை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் 99 வீதமான பௌத்த பிக்குகள் சமாதனத்தையே வலியுறுத்துகின்றனர்.

எனவே, இலங்கையில் எவரும் இரண்டாம் தர பிரஜைகள் அல்லர். இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னோக்கி செல்வோம்.” – என்றார்.