வங்குரோத்து நிலையில் நாடு – செங்கடலுக்கு கப்பல் அனுப்புவது நியாயமா?

” நாடு வங்குரோத்து அடைந்து, மக்கள் திண்டாடும் நிலையில் அதற்கு தீர்வை தேடாமல் செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபா செலவில் கடற்படை கப்பலை அனுப்ப அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இதன்மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசின் முடிவை கடுமையாக சாடினார்.

” செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்காக 250 மில்லியன் ரூபா செலவளித்து கடற்படை கப்பலொன்றை அனுப்புவதற்கு அரசு தயாராகிவருகின்றது.

நாட்டில் சிறார்களுக்கு மூவேளையும் உணவு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாத பிரச்சினையும் தலைவிரித்தாடுகின்றது. இவ்வாறு 220 லட்சம் மக்களும் ஏதேவொரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 250 மில்லியன் ரூபா செலவளித்து ஹூதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கான கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்கு கப்பல் அனுப்புவதால் எமது நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் தாம் வழங்கிய கடனில் இத்தனை விகிதத்தை வெட்டுவதாக அறிவித்துள்ளனவா? நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விதத்திலேயே இராஜதந்திர நடவடிக்கை இடம்பெற வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் இல்லை. நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகூட இந்த அரசுக்கு விளங்கவில்லை என்பதையே இப்படியான பிரச்சினைகள் எடுத்துக்காட்டுகின்றன. ” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

அணிசேரா மாநாடு

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான் ரவூப் ஹக்கீம்,

” அமெரிக்கா, இஸ்ரேலின் தேவைக்கமைய செங்கடலுக்கு கப்பல் அனுப்புவதாக இருந்தால், எதற்காக உகண்டாவில் நடைபெறும் அணிசேரா தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க வேண்டும். இந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைதான் என்ன?” – என்று கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு முக்கியம்

மேற்படி கேள்விகளுக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்,

” இது அமெரிக்க பிரச்சினையோ அல்லது இஸ்ரேல் பிரச்சினையோ அல்ல. செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தும்.” – என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ” கப்பல் போக்குவரத்தின்போது செங்கடலை பயன்படுத்தாமல் தென்னாபிரிக்காவுக்கு அப்பால் உள்ள வழியில் சென்றால் இங்கு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அது எமது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்.

நாம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரானவர்கள். அதனை ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பாகும். கிணற்று தவளைபோல் வாழ முடியாது.

எமக்கு பிரச்சினை ஏற்படும்போது உலகின் உதவி கோரப்படும். அதேபோல சர்வதேச மட்டத்தில் எமக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதனைதான் செய்துள்ளோம். இதற்காக மேலதிக செலவுகள் செய்யப்படவில்லை. தற்போதுகூட ஆழ்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுதான் வருகின்றோம். இந்த சமுத்திர பாதுகாப்பு விடயத்திலும் எமது பொறுப்பு நிறைவேற்றப்படுகின்றது.” – எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.