” தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.
” இந்நாட்டில் உள்ள பிரச்சினைகளில், தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் நம்பிக்கை இன்மை என்பது பிரதான பிரச்சினையாகும். அதனை தீர்க்கும்வரை ஒரு நாடாக எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் மட்டும் தீர்வு காண முடியாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் பல அழுத்தங்கள் வரலாம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதியதொரு அரசமைப்பை கொண்டுவருவதற்கு சந்திரிக்கா முற்பட்டார். அது சிறந்த முயற்சி. எனினும், அரசியல் காரணங்களால் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல்போனது.” – எனவும் கருஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
அதேவேளை நல்லாட்சி காலத்திலும் புதிய அரசமைப்பை இயற்ற முயற்சி எடுக்கப்பட்டது. எனினும், குறுகிய அரசியல் நோக்கம், இனவாத கருத்துகளால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.
இனவாதம், மாதவாதத்தால் இந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்சினைகளால் நாடு மீண்டும் பாதிக்க இடமளிக்ககூடாது. நாட்டை புது யுகம் நோக்கி அழைத்துச்செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் – எனவும் கருஜயசூரிய அழைப்பு விடுத்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நாம் முயற்சித்துவருகின்றோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இது தொடர்பான உறுதிமொழியை வழங்குவார்கள் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.