அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’

2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.

கட்சி யாப்பு திருத்தம், அங்கத்துவம் அதிகரிப்பு, கூட்டணி அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அதற்கான பணிகள்கூட முழுவீச்சுடன் இடம்பெற்றுவருகின்றன.

ஆளுங்கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்து தவிக்கின்றது. அக்கட்சிக்கான வாக்கு வங்கியும் சரிந்துவிட்டது எனக் கூறப்படும் நிலையில், 2024 இல் நடைபெறும் தேர்தல்களில் மக்கள் வழங்கும் ஆதரவிலேயே அக்கட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்கவைக்க அக்கட்சி எல்லா வழிகளிலும் போராடிவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. தேசியப்பட்டியல் ஊடாகவே ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது. அந்த ஆசனத்தை வைத்துக்கொண்டு கட்சி தலைவர் ரணில் ஜனாதிபதியும் ஆகிவிட்டார்.

அடுத்த தேர்தல்களை இலக்குவைத்து கட்சிக்குள் மறுசீரமைப்புகள் இடம்பெற்றுள்ளன. 2024 இல் நடைபெறும் தேர்தல்களில் வெற்றிபெற்றால் மாத்திரமே ஐதேகவின் அரசியல் பயணமும் தொடரும்.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவிதியையும் 2024 தான் நிர்ணயிக்கவுள்ளது. சிலவேளை யானை – மொட்டு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிட்டினால் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் உள்ள பலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுவிடுவார்கள்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் மத்தியிலும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றது. என்றும் இல்லாத வகையில் பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும் திரட்டியுள்ளது. எனவே, 2024 இல் நடைபெறும் தேர்தல்களில் அக்கட்சி வெற்றிநடைபோட தவறின், மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்த்தையும் இழக்கும் அபாயம் உள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் 2024 இல் தான் முடிவெடுக்கப்படவுள்ளது. அக்கட்சியின் எதிர்காலமும் 2024 இல் நிர்ணயிக்கப்படவுள்ளது.