பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சி.டி. விக்ரமரத்ன கடந்த 24 ஆம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். 4 தடவைகள் பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இம்முறை ஓய்வுபெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன்போது சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பதில் பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது. அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதியால் பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1998 பெப்ரவரி 23 ஆம் திகதியே தேசபந்து தென்னகோன் பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார். 2019 நவம்பர் 20 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றார்.

2032 மார்ச் 07 ஆம் திகதியே பொலிஸ் சேவையில் இருந்து இவர் ஓய்வுபெறும் கால எல்லையாகும்.

பொலிஸ் சேவையில் 25 வருடங்களை பூர்த்தி செய்துள்ள அவர், அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியாக உள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் மாணவராவார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் ஆவார்.

மேல்மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த அவர், போதைப்பொருள் கடத்தல், பாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

அதேவேளை, ராஜபக்சக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற விமர்சனத்துக்கும் உள்ளானார். மக்கள் போராட்டத்தின்போது இவர்மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர் , தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து, போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

நியமனத்துக்கு எதிர்ப்பு

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றார் – என்று கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நியமனம் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும். பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, 2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

இவரின் நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டஆலோசனை பெறப்பட்டுவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.