ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இதன்படி நேற்று முதல் அமுலுக்கு வந்த வகையில் விளையாட்டு , இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கியுள்ளார்.
அரசமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது பற்றி நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தினார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை கலைத்துவிட்டு, அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை ரொஷான் ரணசிங்க அமைத்திருந்தார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை இடைக்கால தடையும் விதித்துள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையை ரொஷான் ரணசிங்க கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ரொஷான் ரணசிங்க, நேற்று கடுமையான உரையொன்றை நிகழ்த்தினார். ரொஷான் ரணசிங்கவின் அந்த உரை வருமாறு,
” 69 லட்சம்பேரின் ஆணையுடன்தான் நான் அமைச்சரவையில் இருக்கின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னை நீக்க முடியும். இந்த நாடு வங்குரோத்து அடைய பல காரணங்கள் உள்ளன. அரசியல்வாதிகளும் இதற்கு காரணம். தொப்பி அளவானவர்கள் அதனை போட்டுக்கொள்ளலாம்.
ஆசியாவின் சொர்க்கபூமியாக இருந்த இலங்கை கள்வர்களின் பூமியாக மாறியுள்ளது. என்னை கொலை செய்யலாம். நடுவீதியில் வைத்து கொல்லலாம். அது இன்றையா அல்லது நாளையா என தெரியாது. இடைக்கால குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வேண்டுமாம். இவ்வாறு பழிவாங்க முற்படக்கூடாது. என்னையும், எனது நிறுவனங்களையும் வீழ்த்துவதற்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகார தலையீடும் இருப்பது கவலையளிக்கின்றது. எனக்கு வாழும் உரிமையை வழங்குங்கள். வேறு எந்த நாட்டிலும் தஞ்சம் அடையும் எண்ணம் கிடையாது.
சாகல ரத்னாயவுக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு அவ்வாறு இல்லை. இந்த கிரிக்கெட் பிரச்சினை தீர வேண்டும். இல்லையேல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்ப்போம். பிரச்சினை முடிய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஊழல், மோசடி கும்பல் வீட்டுக்கு செல்ல வேண்டும்.” – என்றார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய ரொஷான் ரணசிங்க, தனது பதவி விலகலுக்கான காரணம் பற்றி அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார். எதிர்க்கட்சி தலைவர் தன்னை அழைத்திருந்ததாகவும், அதன் பிரகாரம் அவரின் அலுவலகம் சென்றபோது அங்கு இந்திய தூதுவர் இருந்தாகவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரின் விளக்கம்
” இந்திய தூதுவருடன் சந்திப்பு நடத்தினேன். ரொஷான் ரணசிங்கவையும் அழைத்திருந்தேன். கிரிக்கெட் தடையை நீக்குவதற்கான முயற்சியே அது. மாறாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை அல்ல.” – என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.