” நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பு பேரவையில் தொடர்ந்தும் வெற்றிடம் நிலவுகின்றது. 10 உறுப்பினர்களும் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது பாரதூரமான விடயமாகும். எமது தரப்பில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை பரிந்துரைத்தோம். சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை நாம் முன்மொழிந்தோம். எனினும், அவரை அரசமைப்பு பேரவைக்கு உள்வாங்கவில்லை .” எனவும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
” தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி பதவியேற்கும்போது கூறினார். இதற்காக மூன்று தடவைகள் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் அவரால் அரசமைப்பு பேரவை பிரச்சினையைக்கூட தீர்க்க முடியவில்லை.
உரிமை பிரச்சினை காரணமாகவே 30 வருடகால யுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் நீங்கள் இன்னமும் அதனையே செய்கின்றீர்கள். நாம் இந்நாட்டு யாசகர்கள் அல்லர். நாம் யாசகம் கேட்கவும் இல்லை. இந்த வாரம் மிக முக்கிய வாரம். வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூரும் வாரம்.
பிரிக்கபடாத ஒன்றிணைந்த நாட்டில் வாழ வேண்டும் என நாம் விரும்புகின்றோம். நீங்கள் இப்படி செய்தால் அது எப்படி சாத்தியமாகும்?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரக் குற்றம்
” பொதுமக்களின் நம்பிக்கையைமீறுவது மிக மோசமான விடயம். பொது மக்களின் நம்பிக்கையை மீறியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அவ்வாறு உயர்நீதிமன்றத்தால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த சபையில் அமர்வதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் இராஜினாமா செய்திருக்க வேண்டும். உண்மையான ஜனநாயக நாடுகளில் தீர்ப்பு வெளியாகி, மறுநாளே இராஜினாமா இடம்பெற்றிருக்கும். ராஜபக்சக்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இப்போதாவது சட்டத்தை மதித்து, மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும். ” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.