ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே எதிர்க்கட்சி தலைவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, பி.பீ. ஜயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால், ஆடிகல, டபிள்யூ.டி. லக்‌ஷ்மன் உள்ளிட்டவர்களே பொருளாதாரத்தை வங்குரோத்தடைய வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊடாகவும் இது உறுதியாகியுள்ளது.

எனவே, நாட்டை வங்குரோத்து அடைய வைத்த, அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நபர்களுக்கு இதற்கு மேலும் சிவில் உரிமைகளை வழங்குவது பொருத்தமல்ல என்று மக்கள் கருதுகின்றனர் .

இதற்கமைய மேற்கூறப்பட்ட நபர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான நடவடிக்கையை விசேட ஜனாதிபதி குழு ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதியால் மட்டுமே செய்ய முடியும். அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன். 220 லட்சம் மக்களின் சார்பில் இந்த கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவை கலைக்கவும் – அநுர

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அநுர கூறியவை வருமாறு,

” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட ஆட்டிகல உள்ளிட்ட குழுவினர், பொருளாதார கொலையாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இவர்களின் தீர்மானங்கள் வழிவகுத்துள்ளன. அதாவது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, பொருளாதாரக் கொலை இடம்பெற்றுள்ளது, இதனுடன் அவர்கள் தொடர்புபட்டுள்ளனர், பொருளாதாரக் கொலையுடன் தொடர்புபட்டதால்தான் அவர்கள் பொருளாதாரக் கொலையாளிகள் என விளிக்கப்படுகின்றனர்.

உயர்நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்த பின்னரே இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தெரிவுக்குழுவால் பயன் இல்லை. ஏனெனில் உயர்நீதிமன்றம் உரிய தீர்ப்பை – தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே , நாடாளுமன்றத்தின் நேரம், பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அந்த தெரிவுக்குழுவின் பணியை நிறுத்தலாம்.” – என்றார் அநுரகுமார.