இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு – செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதில் செல்வந்த வரி அல்லது சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நபர்களினதும் சொத்துக்களை மதிப்பீடு செய்து, அதற்கமைய வரி அறவிடுவதை நோக்கமாக கொண்டே இந் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என கூறப்படுகின்றது.
நிதி, வங்கி வைப்பு, நிலையான சொத்துகள், காப்புறுதி மற்றும் ஓய்வூதியம், வியாபார நடவடிக்கைகள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்து வரி அறவிடுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த யோசனை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 2025 இல் அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளபோதிலும், அரச வருமானம் குறைவடைந்துள்ளதால் அடுத்தவருடம் அமுல் நடைமுறைப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.
நபரொருவருக்கு உரித்தான வீடொன்று, வாகனமொன்று மற்றும் காணி ஒன்றுக்கு மேலதிகமாக, குறித்த நபருக்கு திரட்டப்படும் சொத்துகள்மீதே இந்த வரியை அறவிட முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
இந்த வரி என்.எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட வரியென்றும், பிரேமதாச ஆட்சிகாலத்திலேயே அது நீக்கப்பட்டது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.