ஒத்திவைப்பு சந்தேகம் எப்போது நீங்கும்?

ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்தும், தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணை இன்றியே நிராகரிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்குரிய சூழ்ச்சி இன்னும் கைவிடப்படவில்லை என எதிரணிகள் அஞ்சுகின்றன.

தேர்தலை ஒத்திவைப்பதற்கானதொரு அஸ்திரமே அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல யோசனையாகும் என மேற்படி கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆறாக இருந்த ஜனாதிபதியின் பதவிகாலம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 5 வருடங்களாக குறைக்கப்பட்டது.

எனினும், அரசமைப்பின் 83 ஆவது பிரிவில் ஆறு என இருப்பதால் அதனையும் ஐந்தாக சீர்செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதியால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு அனுமதி பெறப்படவுள்ளது.

அது 22 ஆவது திருத்தச்சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியாக வேண்டும். இவ்வாறு 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வெளிவந்த பின்னர் அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடி, தேர்தல் தடுக்கப்படலாம் என்றே எதிரணிகள் அஞ்சுகின்றன.

உள்ளாட்சிசபைத் தேர்தல் பிற்போடப்பட்டதுபோல, இது விடயத்திலும் அவ்வாறு நடக்கலாம் என சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், எதிரணிகளின் இந்த குற்றச்சாட்டை, தகவல்களை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,

“ ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடக்கும். அதற்கு எவ்வித தடையும் இல்லை. யாரும் நிறுத்தபோவதும் இல்லை. வெகுவிரைவில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

அரசமைப்பு மறுசீரமைப்பு (22 ஆவது திருத்தச்சட்டமூலம்) பணியும் ஜனாதிபதி தேர்தலுக்கு தடையாக அமையாது.
சிலவேளை தேர்தலுக்கு பிறகே மறுசீரமைப்பு இடம்பெறலாம். சிறிய வழுவொன்று சரிசெய்யப்படுகின்றது. மாறாக தேர்தலை பிற்போடும் எந்த நோக்கமும் அதில் இல்லை. தேர்தலை பிற்போட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும் கிட்டாது. நாம் இடமளிக்கபோவதும் இல்லை.” – என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் முடிவடையும்வரை அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

தனது அமைச்சின் செயலாளருக்கே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். எனினும், இது கூட்டு அமைச்சரவை பத்திரம் என்பதால் ஜனாதிபதியால் கொண்டுவர முடியும் என எதிரணிகள் நம்புகின்றன.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பதற்குரிய அதிகாரம் கிட்டியும், அக்குழுவினர் மாத இறுதிவரை அவகாசம் எடுத்திருப்பதுகூட அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.