உறுதியானது ஜனாதிபதி தேர்தல்!

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தால தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவால் கடந்த 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த மேற்படி அடிப்படை உரிமை மனு, பிரதம நீதியசர் ஜயந்த சூயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நீதியரசர்கள் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், வழக்கு கட்டணமாக 5 லட்சம் ரூபாவை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மனுதாரர் செலுத்த வேண்டும் எனவும் மூவடரங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், குறித்த மனு அடிப்படை காரணமின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

அதேவேளை, நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இனியாவது ஜோக்கர் வேலைகளை ரணில் விக்கிரமசிங்க கைவிட வேண்டும் என்று மேற்படி தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்டத்தரணி சுனில் வட்டவள கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தல் தொடர்பில் அறிவிப்பை விடுப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கட்டவுள்ளது. அதன்பின்னர் தேர்தல் திகதி, வேட்பு மனு ஏற்பு திகதி உள்ளிட்ட விடயங்கள் அறிவிக்கப்படும்.