இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வை காணுங்கள்!

நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் வெளிப்படைதன்மையுடன் செயற்பட வேண்டும் – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பேராயர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சம்பந்தன் வெளிப்படைதன்மையுடன் செயற்பட்டவர். 30 வருட கால போரும், அதன் பின்னரான காலப்பகுதியும் துயர்மிக்க காலப்பகுதியாக இருந்தது. எனினும், வெளிப்படை தன்மையுடன் செயல்படும் இயல்பு சம்பந்தனிடம் காணப்பட்டது.

பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தீர்வை நோக்கி பயணிப்பதற்குரிய தைரியம் எமது அரசியல் தலைமைகளுக்கு கிட்ட வேண்டும்.” –எனவும் பேராசர் குறிப்பிட்டார்.

“ எமது நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள இனங்கள் சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் அதேவேளை சமூக ரிதியிலும் முன்னேற்ற வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு அரசு செய்யும் என நம்புகின்றோம்.” – எனவும் பேராயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

அதேவேளை, அமரர் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வந்திருந்த சப்ரகமுவ மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சர் நவீன்

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது அரசமைப்பில் உள்ள ஒரு விடயமாகும். உயர்நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையான ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, எனவே, 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது குறித்து நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தீர்மானம் எடுக்க வேண்டும்.” – எனவும் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.