“ ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துவருகின்றார். இந்நாட்டை பொருளாதார அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய பிரதான கடமையொன்று உள்ளது என்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன். 75 வருடங்களாக இனங்களுக்கிடையில் இருந்த உறவை சீர்குலைத்து, துருவமயப்படுத்தி இருக்கின்றன ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட வேண்டும். “ – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்துள்ள ஒற்றையாட்சி அரசமைப்பு, உச்ச நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கி இருக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பு ஒழிக்கப்பட்டு, தமிழ் தேசமும், சிங்கள தேசமும் இந்நாட்டின் முன்னேற்றத்தில் சமத்துவமாக பங்கெடுக்ககூடிய வகையில் சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே மட்டுமே நிரந்தர முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒற்றையாட்சி முறைமையில் உள்ள தோல்விகளை ஒப்புக்கொண்டு ஜனாதிபதி தன்னுடைய பதவி காலத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து, தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார?” – எனவும் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.