மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இம்முறை மே தினக் கூட்டம்கூட, ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பிரசாரக் கூட்டமாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அறகலயவால் ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி என்பவற்றை இழந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மக்கள் போராட்டத்துக்கு பிறகு அடுத்த தேர்தலையே முதலாவது தேர்தலாக எதிர்கொள்கின்றது.
69 லட்சமாக இருந்த மொட்டு கட்சியின் வாக்குவங்கி சடுதியாக குறைவடைந்துள்ளது எனவும், அக்கட்சியால் ஆட்சிபீடமேற முடியாது எனவும் பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தமக்கு மக்கள் பலம் உள்ளதை என்பதை காண்பிக்கும் வகையில் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு மொட்டு கட்சி வியூகம் வகுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே மே தினக் கூட்டத்தை நடத்துகின்றது. ஐக்கய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள கூட்டணிக்கான சமிக்ஞையும் இதன்போது வெளிப்படுத்தப்படவுள்ளது.
எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஐதேக மேடையேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் தமக்கான மக்கள் ஆதரவு அலை அமோகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவுள்ளன.
இதர சிறு கட்சிகளும் தேர்தலை மையப்படுத்தியதாகவே மேதினக் கூட்டம், பேரணிகளை நடத்தவுள்ளன. அதேபோல சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களாலும் மேதினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.