தூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!

வெளிநாட்டு தூதரகங்களில் சேவையாற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பான தகவல்களை தனக்கு வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களை மீள அழைப்பது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அரசியல் சிபாரிசின் அடிப்படையில் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் எமது நாட்டு அரசியல் வாதிகளின் பிள்ளைகள், உறவினர்கள மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் முழுமையானதொரு அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மீள அழைக்கப்படமாட்டார்கள். ஏனெனில் சில சர்வதேச மாநாடுகள் நடைபெறுகின்றன.

உதாரணமாக தற்போது ஐ.நா.பொதுச்சபை கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இப்படியான சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

எது எப்படி இருந்தாலும் அறிக்கை கிடைத்த பின்னர் மீள அழைப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.