“மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் முடிவெடுப்பதற்குரிய பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதேபோல காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், “ ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்” ஐந்தாண்டுகள் எனும் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டது.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம், உறுமய மற்றும் அஸ்வெசும வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 2024 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய, மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்படும். அத்துடன், மாகாண சபைகளுக்கு உரித்தான அதேபோல மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள, முதலாம் அட்டவணையில் உள்ள அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு மீண்டும் வழங்கப்படும்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.
கட்சி தலைவர்கள் அனுமதித்துள்ள, உப அட்டவணை 3 இல் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாணசபைகளிடம் ஒப்படைக்கப்படும்.
தேசிய கொள்கை திட்டத்துக்கு அமைய, தமது மாகாணத்துக்குள்
புhடசாலைக் கல்வி, தொழில் பயிற்சி, பட்டமளிப்பு நிறுவனம், மாகாண சுற்றுலா அபிவிருத்தி, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும்.
இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மாவட்ட அபிவிருத்தி சபை நிறுவப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற பின்னர், ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.
போர் காலத்தில் இழக்கப்பட்ட காணியென்பது உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். இதற்கு நிலையானதொரு தீர்வைக்காணும் நோக்கில் தேசிய காணி ஆணைக்குழுவொன்று நிறுவப்படும். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் அமுல்படுத்தப்படும்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழிலில் ஈடுபடுவதற்கு நிதி நிவாரணம் வழங்கப்படும்.