சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

புதிய அரசு அமையப்பெற்று முதல் மூன்று மாதங்களுக்குள் இதற்குரிய பணி ஆரம்பிக்கப்பட்டு விரைவில் அது முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பிரசாரம் செய்தது. ஆனால் இம்முறை அது பற்றி பேசப்படுவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஐ.ம.சவின் நிலைப்பாடு மாறிவிட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஜித் பி பெரேரா மேலும் கூறியவை வருமாறு,

“ பல திருத்தங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசமைப்புக்கு பதிலாக புதியதொரு அரசமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

புதிய அரசமைப்பை இயற்றும் பணியை மூன்று மாதகாலப்பகுதிக்குள் ஆரம்பித்து, சட்டமூலம் தயாரிக்கும் பணியை கூடியவிரைவில் முடிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி குழுவொன்று அமைக்கப்பட்டு இதற்குரிய பணி இடம்பெறும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதற்காக எமது கட்சி தலைவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்.

ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். நாடாளுமன்றத்தின் பலமும் கிடைக்கப்பெறும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல்முறை மாற்றம், நீதித்துறையை வலுப்படுத்தல், மக்களின் அடிப்படை உரிமைகள், கலாசார உரிமைகள், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்பு அமையும்.” – என்றார்.