சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேர்தல் நடத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திகதி விவரத்தின் அடிப்படையில் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அந்தவகையில் எதிர்வரும் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்கு இடைப்பட்ட நாளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதில் துளியளவும் சந்தேகம் இல்லை.
நிலைமை இவ்வாறு இருக்கையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி, தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கதை அடிபடுகின்றது. அவ்வாறு செய்வதற்கு எமது சட்ட கட்டமைப்பில் இடமில்லை.

தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை. கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவி காலத்துக்காகவே நாடாளுமன்றம் ஊடாக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேஆர் ஜயவர்தன நாடாளுமன்றத்தின் ஆயட்காலத்தை நீடித்துக்கொள்வது சம்பந்தமாகவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இருந்தார். மாறாக ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அல்ல. எனவே, இவை இரண்டையும் குழப்பிகொள்ளகூடாது.” – என்றார்.

மொட்டு கட்சியும் எதிர்ப்பு

தேர்தல் நடத்தப்படாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொருமுறை நாட்டை ஆள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனை முட்டாள்தனமானது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

“தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்று அவசியமில்லை, இந்த ஜனாதிபதிக்கே மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். இக்கருத்துடன் மொட்டு கட்சி உடன்படுகின்றதா…” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எந்த விதத்திலும் நாம் உடன்படமாட்டோம். இவ்வாறான யோசனைகள் முட்டாள்தனமானவை. ஜனநாயகம் பற்றி அறிவித்தலாத முட்டாள்களே இவ்வாறு கருத்துகளை வெளியிடக்கூடும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி விமர்சனங்களுக்கு உள்ளான கட்சியே எமது கட்சி தவிர, தேர்தலை ஒத்திவைத்த கட்சி என்ற குற்றச்சாட்டு கிடையாது.

நாட்டில் இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிசபைகளின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியின்கீழ்தான் உள்ளது. இது ஏற்புடையது அல்ல. ஏதேச்சாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்கு வழிவகுக்ககூடியது. தேர்தலை பெறுவதற்காக நாம் போராடுவோம்.” – என்றார்.