ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.
அது பற்றிய முடிவை இன்னும் அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், பூர்வாங்க ஆயத்த வேலைகளில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை அவர் இவ்வார முற்பகுதியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்தில் மகாஜன எக்சத் பெரமுன வைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார். மேலும். பல அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவது எனவும், அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஒத்த கருத்துடைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்ட ணியை உருவாக்குவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் புதிய அரசியல் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் ஒரு தரப்பு வலியுறுத்தியது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளர் நகர்வு இனி மேலும் வலுப்பெறும் தன்னை இந்த ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷக்களோடு, பௌத்த – சிங்களத் தீவிரப் போக்குக் கொண்ட ராஜபக்ஷக்களோடு, கன்னை கட்டி, அணி சேர முடிவு செய்துவிட்டார்.
அவரின் அந்த அணியில் சேருமாறு விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்கள் மற்றும் டலஸ் அழகப்பெரும போன்ற தரப்பினருக்கும் அழைப்பு விடுவதற்கு மேற்படி ரணில் கூட்டிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆக, பெரும் தேசிய வாதத்தையும் இனவாதத்தையும் கக்குவதிலும், நடை முறையில் அவற்றை வெளிப்படுத்துவதிலும் சற்று அமுக்கி வாசித்து வந்த ரணில் விக்கிரமசிங்கவும், கடைசியாகத் தேர்தல் வெற்றிக்காக இனவாதத் தரப்புக்களுடன் கூட்டிணைகின்றார்.
அதேசமயம், தமிழர்களின் வாக்குகள் ரணிலின் பிரதான எதிர்த்தரப்பான சஜித் துக்கும் கிடைக்காமல் இருப்பதையும் – தென்னிலங்கைப் பேரினவாதிகளின் வாக்குகள் ரணிலுக்கே கிட்டுவதையும் – உறுதிப்படுத்துவதற்காக ‘ஒரே கல்லில் இரு மாங்காய்கள்’ என்ற அரசியல் காய் நகர்த்தல்கள் இனி தமிழர் தாயகத்திலும் கட்டவிழும். இதற்காக இரண்டு கட்ட நகர்வுகள் நடக்கும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற காய் நகர்த்தல் மூலம் ரணிலுக்குக் கிட்டாத தமிழ் வாக்குகளை சஜித்துக்கும் கிடைக்காமல் தடுக்கும் நகர்வு தீவிரம் பெறும்.
அதே நேரம் தமிழர்கள் தங்கள் தேசிய தாயகத்தில் தனியான பொது வேட்பாளரை நிறுத்துகின்றார்கள் என்ற கருத்துரையை சிங்களத்தில் ஊதிப் பெருப்பித்து, பேரின வாதத்தைப் பெருந் தீயாகக் கிளப்பி, தென்னிலங்கை வாக்குகளை ரணிலுக்கு விழவைப்பார்கள். இதற்கான பேரினவாதத் தீவிரப் போக்குத் தரப்புகள் இனி ரணில் பக்கத்தில் கூட்டிணைவதைக் காணலாம். தமிழர் தரப்பின் பொதுவேட்பாளர் என்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாடகம் தமிழர் தாயகத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரை ஆதரிக்கும் பேரினவாதிகளின் தோன்றாத் துணையுடன் கட்டவிழும் என்றும் எதிர்பார்க்கலாம்.