அறகலய காலப்பகுதியில் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடமே இன்றைய (02) சபை அமர்வின்போது இந்த இந்த கோரிக்கையை விமல் வீரவன்ச முன்வைத்தார்.
அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய விமல் வீரவன்ச இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின் முடிவில் நீங்கள் (சபாநாயகர்) முக்கியமான தகவலை வெளிப்படுத்தினீர்கள்.
அறகலய காலப்பகுதியில் அரசமைப்புக்கு அப்பால், ஜனாதிபதி பதவியை ஏற்றுமாறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்கள் அழுத்தம் கொடுத்தன என்று சுட்டிக்காட்டி இருந்தீர்கள்.
‘ 9 மறைக்கப்பட்ட கதை’ எனும் நூலை நான் எழுதி இருந்தேன். அதில் தெளிவாக இவ்விடயத்தை குறிப்பிட்டிருந்தேன். எந்த தூதரகத்தால், எந்தெந்த தூதுவர்களால் மற்றும் அரசியல் குழுக்களால் உங்களுக்கு (சபாநாயகருக்கு) அழுத்தம் கொடுக்கப்பட்டது என தெளிவுபடுத்தியுள்ளேன்.
அதேபோல கோட்டாபய ராஜபக்சவால் எழுத்தப்பட்ட நூலிலும் தம்மை பதவியில் இருந்து விலகுமாறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அழுத்தம் கொடுத்துள்ளமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் பொய் கூறமாட்டார் என நம்புகின்றேன். நானும் மனசாட்சியின் பிரகாரம் உண்மையைதான் குறிப்பிட்டுள்ளேன். கோட்டாபய ராஜபக்சவும் சூழ்ச்சி தொடர்பில் பொய் எழுதியுள்ளார் என நம்பவில்லை. எனவே, இந்த மூன்று விடயங்களும் உண்மையெனில் அது பாரதூரமான விடயமாகும். இந்நாட்டின் இறையாண்மை தொடர்பான பிரச்சினையாகும்.
நடந்தது நடந்துமுடிந்துவிட்டது , அது பற்றி கதைப்பது பலனில்லை எனக் கருதக்கூடாது. அவ்வாறு செய்வது மக்கள் இறைமையை அவமதிக்கும் செயல்.
எனவே, எமது நாட்டின் இறைமையாண்மைக்கு அழுத்தம் கொடுத்தது யார்? அரசமைப்புக்கு அப்பால் சென்று தீர்மானங்களை எடுக்குமாறு வலியுறுத்தியது யார்? இதன் நேர்ககம் என்ன? என்பன குறித்து ஆராய இந்த சபையில் இரு நாட்கள் விவாதம் அவசியம்.” என்று வலியுறுத்தினார்.
அதேபோல இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என நம்பவில்லை. எனவே, ஆளும், எதிரணி உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அவ்வாறு செய்வதன்மூலமே எமக்கு சரியான தகவல்கள், காரணங்கள் கிடைக்கப்பெறும். உங்கள் அறிவிப்பு, எனது நூலின் உள்ளடக்கம் , கோட்டாபய ராஜபக்சவின் நூல் மற்றும் ஏனைய தரப்புகளால் இது சம்பந்தமாக வெளியிட்டப்பட்ட கருத்துகள் என்பவற்றை கருத்திற்கொண்டு, மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும், எதிர்கால சந்ததியினர் இச்சூழ்ச்சியில் சிக்காமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும்.” – எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
சுபாநாயகரின் பதில்
விமலின் இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,
“ அன்றைய தினம் மக்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்தது எமது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள்தான். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து நாடாளுமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை அழிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. கஷ்டத்துக்கு மத்தியில் அதனை நாம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நீங்கள் (விமல்) கூறுவதுபோல வெளிநாட்டு அழுத்தங்கள்மூலம் மட்டுமே அது நடந்ததாக எனக்கு தகவல் கிடைக்கவில்லை.” என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,
“ உள்ளக அழுத்தம் இருக்கவில்லை என நான் கூறமுற்படவில்லை. இவ்வாறு இருந்த உள்ளக அழுத்தத்தை வெளியக சக்திகள் தமது இலக்கை அடைந்துகொள்வதற்காக வழிநடத்த முற்பட்டன. இது பற்றி விசாரிக்க எமக்கு உரிமை உள்ளது. அவ்வாறு விசாரிக்காமல், மூடி மறைத்து புத்தகத்தை மூட முற்பட்டால் அது எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகவே அமையும்.” – என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்,
“ நீங்கள் கூறுவதுபோன்ற அச்சுறுத்தலை நான் கண்டதில்லை. இந்த இடத்துக்கு (நாடாளுமன்ற வளாகம்) வந்து எமக்கு எல்லாம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைதான் கண்டேன். இதுதான் எமது இறைமைக்கு செய்யப்பட்ட பாரிய சேதமாகும். அது பற்றி நாம் சிந்திப்போம். ஏதிர்காலத்தால் இவ்வாறான அசம்பாவித சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும். எமது தரப்பில் தவறுகள் நடக்கும்போது பிறர் கையடிக்கலாம். அதனை தடுக்க முடியாது.” – என்று கூறினார்.
எனினும், விவாதம் நடத்துவதற்கான அனுமதி மற்றும் தெரிவுக்குழு அமைப்பதற்கான ஏற்பாடு பற்றி சபாநாயகர் நேரடி பதிலை வழங்கவில்லை.