இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்குச் செல்கிறார்.
இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாலத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை
முன்னெடுக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து, இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது.
வாகனப் போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, இரு வழி ரயிபாதையும் இந்த பாலத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட உள்ளது.
இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உத்தேச பாலத்தின் ஊடான நில இணைப்பை மையப்படுத்தி, தலைமன்னார் தொடக்கம் திருகோணமலை ஊடாக கொழும்பு வரையிலான விசேட நேரடி நெடுஞ் சாலை போக்குவரத்துக் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை துறைமுகம் வரையிலான வீதிக் கட்டமைபு நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் பிரகாரம், இந்தியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செல்லும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக் கவுள்ளார். இந்தப் பாலம் ஊடாக இரு நாட்டு பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று இருதரப்புகளும் நம் பிக்கை வெளியிட்டுள்ளன. எனினும், இத்திட்டத்துக்கு தென்னிலங்கையில் உள்ள சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளது.
அதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவொன்று இன்று காலை சீனா நோக்கி பயணமாகியுள்ளது. பிரதமருடன் அவரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க ஆகியோர் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை சீனாவில் இருப்பார்கள்.
சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரமுகர்களுடன் இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர்.