9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தொகுக்கப்பட வேண்டும்.
இதற்கமைய புதிய கூட்டத்தொடர் 2024 பெப்ரவரி 7 திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார்.
அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் செயலிழக்கும். புதிய கூட்டத்தொடரின் பின்னர் புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கோப், கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், இம்முறை ஆளுங்கட்சியினருக்கே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது வாக்கெடுப்பு கோர முடியாது. பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்படலாம். அதுவும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை விவாதமாகவே அது அமையும்.
நாடாளுமன்றத்தில் கோப் குழு தலைவராக செயற்பட்ட ரஞ்சித் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராவார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கோப் குழுவுக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் பக்கச்சார்பாக செயற்பட்டார். இதனால் அவரை கோப்குழுவில் இருந்து நீக்குமாறு எதிரணிகள் அழுத்தம் கொடுத்தன. எனினும், இதற்கான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கவில்லை. மாறாக கோப் குழுவின் செயற்பாடுகள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இடைநிறுத்தப்பட்டது.
கோபா குழுவின் தலைவர் அரசுக்கு நெருக்கடியாக இல்லை.
எனினும், அரச நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசுக்கு தலையிடியாக உள்ளார். அவரை பதவி நீக்கினால் அது அடுத்த தலையிடி, எனவே, நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதால் சபை மீண்டும் கூடும்போது புதிய குழு நியமிக்கப்பட வேண்டும், இதன்போது அக்குழுவின் தலைமைப்பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்காமல் இருப்பதற்கு அரசு பிரயத்தனம் காட்டும்.
இவ்வருடம் தேர்தல் வருடம் என்பதால் தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் குறுக்கு வழியிலேனும் செய்வதற்கே அரசு முற்படும்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் குறுகில காலப்பகுதிக்குள் நாடாளுமன்ற அமர்வுகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கூற்றின்பிரகாரம், 1977 முதல் 1988 வரையான காலப்பகுதியிலேயே 5 தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மூன்றரை வருட காலப்பகுதிக்குள் 4 தடவைகள் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.