நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு வலியுறுத்தினார்.
‘ நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்ற ராஜபக்சக்கள் கடல் சுற்றுலா செல்கின்றனர்.
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சக்களை பாதுகாப்பதில் மட்டும்தான் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றுள்ளார். அடிதட்டு மக்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் வரிகளை விதித்து நாட்டைக் கட்டியெழப்ப முடியாது.
ஒற்றையாட்சிதான் இந்த நாட்டுக்கு சாபக்கேடு. எனவே, அதனை ஒழித்து தமிழ் தேச இறைமையை அங்கீகரிக்ககூடிய வகையில் சமஷ்டி அரசமைப்பை கொண்டுவாருங்கள்.” -எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், ‘ தமிழ், முஸ்லிம் மக்களின் குரல்வளையை நசுக்கும் வகையிலும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் விதத்திலுமே புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். அரசு அச்சட்டமூலத்தை மீளப்பெற வேண்டும்.” – எனவும் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
‘ ஒற்றையாட்சிமுறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதன்மூலமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை அரசு நிராகரித்துள்ளது.