” போர் இல்லாத சூழ்நிலையிலும் கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது. இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமா? கிராம அதிகாரிகளின் செயலை எதற்காக பொலிஸார் செய்ய வேண்டும்? இந்த பதிவு நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் கூறியவை வருமாறு ,
” கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டிய, நாராஹேன்பிட்டிய, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதரை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து, மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது.
அதுவும் சிங்கள மொழி ஊடாகவே விண்ணப்பம் வழங்கப்படுகின்றது. தமிழ் மொழியும் அரச கரும மொழியாகும். எனவே, இது அரசமைப்பைமீறும் செயலாகும்.
நாட்டில் போர் முடிந்துவிட்டதாக இந்த நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு விடுத்தார். இன்று போர் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. அப்படியானால் எதற்காக இந்த பதிவு? கிராம அதிகாரிகள் செய்யும் வேலையை பொலிஸார் செய்யக்கூடாது.
மதம் கேட்கப்படுகின்றது? எதற்காக பொங்கலுக்கு வாழ்த்தவா? பிறந்த நாள் கேட்கப்படுகின்றது? பிறந்தநாளுக்கு வாழ்த்தவா? உறவுமுறை கேட்கப்படுகின்றது. பொலிஸில் உள்ள சிலர் பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள். குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, எந்த அடிப்படையில் தகவல்களை வழங்குவது? இது பொலிஸ் இராஜ்ஜியம் அல்ல. இந்த செயலை நிறுத்த வேண்டும்.” – – என்றார் மனோ கணேசன்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதில்
” நாட்டில் போர் முடிவடைந்திருந்தாலும் குற்றச்செயல்கள் குறையவில்லை. எனவே, பொலிஸ் பதிவை நிறுத்த முடியாது. அது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாகும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார் .
அவர் வழங்கியுள்ள பதில் வருமாறு.
” மனோ கணேசன் முன்வைத்த முதல் விடயம் அப்பட்டமான பொய்யாகும். தமிழ் வீடுகளில் மட்டுமல்ல அனைத்து இன மக்களும் வாழும் வீடுகளிலும் தகவல்கள் கோரப்படுகின்றன. கடந்த முறையும் இந்த பிரச்சினை வந்தபோது உறுப்பினரை அழைத்து பேச்சு நடத்தினேன்.
90 வீதம் பதிவு முடிந்துவிட்டது. தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் என மூவின மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்று அல்ல பல வருடங்களாக இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறுகின்றது. நான் அமைச்சு பதவிக்கு வந்த பின்னர் முன்னெடுக்கும் நடவடிக்கை அல்ல இது.
வெளி பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கொழும்பில் தலைமறைவாகியுள்ளனரா அல்லது கொழும்பில் உள்ளவர்கள் வெளியில் உள்ளனரா என்பதை அறிய உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே இந்த தகவல்கள். இந்த நடவடிக்கையில் தவறு கிடையாது. அது நிறுத்தப்படவும் மாட்டாது.
மதம் கேட்கப்படவில்ல, இனம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் விண்ணப்பம் வழங்கப்படவில்லையெனில் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்.