இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் நேற்று மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் பல மணித்தியாலங்கள் நாடு இருளில் மூழ்கியது. போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன. மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
நேற்று மாலை 5.10 மணி முதல் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்களில் சீராகும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், நேற்று இரவு 10.20 மணிக்குப் பின்னர்தான் பல இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு வந்தது.
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்தார்.
மின் தடையால் ஏற்பட்ட இழைப்பு – தடுக்க பொறிமுறை வகுக்கப்படுமா?
நாட்டில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். அது தொடர்பான உரிய விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன் மின் தடையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு, வர்த்தகத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் தேசிய பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி பல பாதிப்புகள் ஏற்பட்டன. இது தொடர்பில் வெளிப்படையான விசாரணை அவசியம். நடந்தது என்ன என்பது தொடர்பில் எமக்கு உண்மை தெரியவர வேண்டும்.
இப்படி மின் தடை ஏற்பட்டால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு என்ன நடக்கும்? எனவே, இந்நாட்டிற்கு உகந்த மின்சார கட்டமைப்பு அவசியம்.
இலங்கை மின்சாரசபை மற்றும் மின் கட்டமைப்பில் மறுசீரமைப்பை ஏற்படுத்த அரசு முயற்சித்துவருகின்றது. தனியார் நிறுவனங்கள் வசம் இவை சென்றால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.
மின் தடையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? வர்த்தகத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு எவ்வளவு, மின்பிறப்பாக்கி வசதி இல்லாத வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதற்கும் துல்லியமான கணிப்புகள் அவசியம்.” – என்றார் சஜித்.
உள்ளக விசாரணை ஆரம்பம்
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
” நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 300 மெகா ஹோட்தான் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனைய மின் தேவை, நீர் மின் ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் நீர்மின் எடுத்துவரும் கட்டமைப்பில் ஏற்பட்ட கட்டமைப்பு, சீரற்ற காலநிலையால் செயலிழந்தமையாலேயே மின் தடை ஏற்பட்டது.
அப்போது 1500 மெகா ஹோட்வரை கேள்வி இருந்தது.மெகா ஹோட் 300 ஐ வைத்துக்கொண்டு இந்த கேள்விக்கு நிரம்பல் வழங்க முடியாததால் நுரைச்சோலையும் செயலிழந்தது.
இதனை மீள் நிலைக்கு கொண்டுவருவதற்கு குறைந்த பட்சம் நான்கு மணிநேரமாவது தேவைப்பட்டது.
இவ்வருடம் 24 மணிநேரமும் மின்சாரம் ஏற்பட்டது. எனினும், நேற்று ( நேற்று முன்தினம்) திடீரென பாதிப்பு ஏற்பட்டது. விசாரணைகளின் பின்னர் தகவல்கள் சபைக்கு வழங்கப்படும்.” – எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பதவி விலகுமாறு அழுத்தம்
” மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவும், அமைச்சின் செயலாளரும் உடன் பதவி விலக வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர்.
” இப்படியான மின் துண்டிப்புகள் இடம்பெறக்கூடும். எனவே, உரிய ஏற்பாடுகள் அவசியம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்திருந்தது. எனினும், அந்த பரிந்துரை குறித்து கவனம் எடுக்கப்படவில்லை. தன்னிச்சையாக செயற்படும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அசமந்தபோக்கு காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பெரும் அநீயாயமாகும்.
அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலக வேண்டும்.” – எனவும் தேரர் குறிப்பிட்டார்.