‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை – இது நல்லிண்ண ஏற்பாடு அல்ல’

” உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம் கைது செய்வார்கள். இதனை தடுக்க முடியாது.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” தமது குடும்பத்தில் உயிரிழந்த ஒருவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் நினைவுகூர முடியும். நானும் எனது தந்தையின் கல்லறைக்கு செல்வேன். அவ்வாறு அனைவருக்கும் செல்ல முடியும். ஆனால் வேறு ஒரு நபரின் பிறந்த நாளன்று தந்தையினதோ அல்லது தம்பியினதோ கல்லறைக்கு செல்வதில்லை. எனது கட்சி கொடியை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு செல்வதும் இல்லை. கட்சி கொடி எனக் கூறுகின்றனர், சாதாரண மக்கள் இவ்வாறு கட்சி கொடியுடன் கல்லறைக்கு செல்வதில்லை.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

” பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கொடியுடன் செல்வது குடும்ப உறுப்பினரை நினைவுகூர அல்லவே…? இது பயங்கரவாதத்துடன் தொடர்புபடவில்லை, பயங்கரவாத கருத்தியலுடன் சம்பந்தப்படவில்லை எனக் கூறமுடியாது.” – எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

” உண்மை தகவல்களை வெளியிடும்போது சிலருக்கு கேட்டுக்கொண்டிருக்க முடியாது. என்னை ஏன் கதைக்க விடமாட்டிகின்றனர் என்பது புரிகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நாம் தவறாக பயன்படுத்தவில்லை. கைதானவர்கள் 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் ஊடாகவே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இப்படியான நிகழ்வுகளை நடத்துவதால்தான் பிரச்சினை. அவ்வாறான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என சொல்லுங்கள். அவ்வாறு நடத்தினால் பொலிஸார் கைது செய்வார்கள். அதனை நிறுத்த முடியாது. சட்டம் செயற்படுத்தப்படும்.” – எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

அதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துக்கொண்டிருக்கையில், அவருக்கும் சாணக்கியம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கிடையில் கடும் சொற்போர் மூண்டது. கஜேந்திரகுமார் எம்.பி. இடையில் சபையில் இருந்து சென்றுவிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகளுக்கும் அமைச்சர் பதில் வழங்கினர்.

” பயங்கரவாத தடைச்சட்டத்தை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை எனவும், அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் (சாணக்கியன்) சுட்டிக்காட்டினார். இந்த கருத்துடன் உடன்படி முடியாது.

உதாரணமாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டால் முடிவு என்ன என்பது உங்களுக்கே தெரியும். ” – என்றார் அமைச்சர்.