வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது – என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போரால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றத்துக்காக பல்வேறு தரப்பின் ஆதரவுடன் அரசால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 847 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் ஆயிரத்து 700 வீடுகளின் பணிகள் முழுமைப்பெற்றாமல் இருந்தது. அவற்றில் ஆயிரத்து 104 வீடுகளின் பணிகள் முழுமைபெற்றுள்ளன. இவ்வருடத்தில் மேலும் ஆயிரத்து 665 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான பணிகளை நிறைவுசெய்வதற்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிக்காக மேலும் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 2024 – 2027 காலப்பகுதிக்குள் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை மாறும் – எனவும் கூறினார்.