புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் முடிவடைந்திருந்தாலும் அவருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது. எனினும், மூன்றாவது தடவை சேவை நீடிப்பு வழங்க அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை.
இரண்டாவது தடவை சேவை நீடிப்பு வழங்கும்போது அடுத்தமுறை புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என அரசமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
எனினும், அரசமைப்பு பேரவையின் அனுமதி இன்றி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சேவை கால நீடிப்பை வழங்கினார்.
இதனால் நிறைவேற்று அதிகாரத்துக்கும், அரசமைப்பு பேரவைக்கும் இடையில் மோதல் வெடித்தது. ரீலோட் முறையில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கலாம், புதியவரை பரிந்துரைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் சிலர் செயற்படுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அரசமைப்பு பேரவை என்பது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய ஓர் அங்கம் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோல அரசமைப்பு பேரவை பற்றி ஆராய தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்துக்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் பொலிஸ்மா அதிபர் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் இருந்து சென்றுவிட்டார். இனி அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படாது எனவும், புதிய பொலிஸ்மா அதிபரே நியமிக்கப்படுவார் எனவும் தெரியவருகின்றது.
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்குமாறு ஆளுங்கட்சியினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபரை தேர்வு செய்யும்வரை பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியால் நியமிக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.