” அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பு பேரவை பற்றி கேள்வி எழுப்பட்டது. தற்போது பொலிஸ்மா அதிபரும் இல்லை. நீதிபதிகளும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நீதியை நிலைநாட்டுவது? பொலிஸாருக்கும் செயற்படமுடியவில்லை. நீதிமன்றத்துக்கும் செயற்படமுடியவில்லை.
பந்துல கருணாரத்னவின் பெயரை எதற்காக நிறுத்திவைத்துள்ளனர் என தெரியவில்லை. இது நான் முன்மொழிந்த பெயர் அல்ல. பிரதமர் நீதியரசர் அனுப்பி வைத்திருந்த பெயர். அதனை நான் அனுப்பினேன். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசரை பிரதமர் நீதியரசருக்கு நியமிக்க முடியும். ” – எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
” அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் இந்த செயற்பாட்டை குழப்புவதற்கு முற்பட்டால் , இந்த முறைமையை எம்மால் செயற்படுத்த முடியாமல்போகும். இந்த சபை பற்றி ஆராய தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும்.
நீதியரசர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். தீர்மானமொன்றை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசமைப்பு பேரவையில் உள்ள உறுப்பினர்களில் மூவர் ஒரு பக்கம் உள்ளனர். மற்றைய மூவர் மற்றுமொரு பக்கம் உள்ளனர். இருவர் வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளனர். ஒரு உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எப்படி அரசை கொண்டு நடத்துவது? ஊழல் தடுப்பு ஆணைக்குழுவைக்கூட நியமிக்க முடியாமல் உள்ளது.” – எனவும் ஜனாதிபதி கவலை வெளியிட்டார்.
அரசமைப்பு பேரவை என்பது நிறைவேற்று அதிகாரத்தின் ஓர் அங்கம். ” – எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவரின் பதில்
” பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிபதிகள் சிலரை நியமிக்க அரசியலமைப்பு பேரவையால் முடியாதுபோயுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அத்துடன், ஜனாதிபதி “கூறுவது போல் இருக்க வேண்டிய பேரவை”யும் அல்ல அது.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பெயர் இரு சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டாலும், இரண்டாவது நியமனம் வழங்கப்படும் போது மூன்றாவது நியமனம் நிரந்தர நியமனமாக இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டது. எனவே அதன் பின்னர் ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட தற்காலிக பெயர்கள் நிராகரிக்கப்பட்டன. இங்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசியலைப்பு பேரவை பொறுப்பல்ல.
அத்துடன் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி நாட்டை தவறாக வழிநடத்துவது பொருத்தமானதல்ல.” – என்றார்.