” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருந்ததுபோல ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் நாட்டில் அராஜக நிலையே தோற்றம் பெறும். ” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
” பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பது ரணில் தரப்புக்கு தெரியும். ரணில் வந்து 14 மாதங்கள் ஆகிவிட்டன. ‘வங்குரோத்து’ நிலையில் இருந்து நாடு மீளவில்லை. வெளிநாட்டு கடன் சுமையும் குறையவில்லை. மாறாக ஈபிஎப் பணம் மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் விலைகள் அதிகரிக்கப்பட்டு, மக்கள் வாழ முடியாத நிலையும் தோற்றம் பெற்றுள்ளது. எனவேதான் பலவந்தமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமையவே அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது , ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த உத்தேசிக்கப்பட்டது. இதனை செய்வதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் முதலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம். தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றிலிரண்டு பலம் இல்லை. அவ்வாறு நடத்தப்பட்டாலும் மக்கள் அதனை தோற்கடிப்பார்கள். எனவே, அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும் எனவும் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு நிதி வழங்காததுபோல், ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருக்க முடியாது. ஜனாதிபதியின் பதவி காலம் முடிவடைந்த பின்னர், தான்தான் ஜனாதிபதி என ஜனாதிபதி பதவியில் இருப்பவர் கூறினாலும், அவரால் பிறப்பிக்கப்படும் கட்டளைகளை முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஏற்கமாட்டார்கள். அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் நாட்டில் அராஜக நிலையே தோற்றம் பெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி விசேட சம்மேளனத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.